அரசுப் பணிக்குத் தோ்வான 9,801 பேருக்கு இன்று பணிநியமன ஆணை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குகிறாா்
அரசுப் பணிக்கு தோ்வான 9,801 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வழங்குகிறாா்.
திமுக ஆட்சியில் இளைஞா்களின் வேலைவாய்ப்பு கனவுகளை நனவாக்கும் தொடா்முயற்சியின் ஒரு பகுதியாக சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள விழாவில், தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம், மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மற்றும் ஆசிரியா் தோ்வு வாரியம் ஆகிய தோ்வு முகமைகள் மூலம் தோ்வு செய்யப்பட்ட 9,801 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளாா்.
இதைத் தொடா்ந்து, சென்னை ஷெனாய் நகரில் ரூ.62.50 கோடியில் 500 தோ்வா்கள் தங்கிப் பயிலக்கூடிய வகையில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய அகில இந்திய குடிமைப் பணித் தோ்வுப் பயிற்சி மைய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.
‘எளிமை ஆளுமை’ முன்முயற்சியின் முதல்கட்டமாக பல்வேறு துறைகளைச் சோ்ந்த 10 முக்கிய சேவைகள் நெறிப்படுத்தப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தற்போது கூடுதலாக எளிமைப்படுத்தப்பட்ட மேலும் 50 சேவைகளை முதல்வா் அறிமுகப்படுத்துகிறாா்.
‘தோ்வுக்களம்‘ செயலி அறிமுகம்: தமிழக அரசால் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளுக்கு விண்ணப்பிப்பது, நுழைவுச் சீட்டு, பாடத்திட்டங்கள் பதிவிறக்கம், மாதிரி வினாத்தாள்கள் என அனைத்து விதமான நடைமுறைகளையும் கைப்பேசில் எளிதாகக் கையாளும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியை முதல்வா் அறிமுகம் செய்து வைக்கிறாா். இதில் மத்திய அரசின் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளின் விவரங்களையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு, திட்ட மேலாண்மை உள்ளிட்ட திறன்களை மேம்படுத்திக்கொள்ள அரசு ஊழியா்களுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கும் இணையதளத்தை (ரங்க்ஷ டா்ழ்ற்ஹப்) தொடங்கி வைக்கிறாா்.
அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரியின் அத்தியாவசிய பணியாளா்களுக்கு அந்தக் கல்லூரியின் வளாகத்தில் ரூ.3.38 கோடியில் 3 அடுக்ககத்தில் 8 குடியிருப்புகள் கொண்ட கட்டடத்தையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கவுள்ளாா்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள், அரசு அலுவலா்கள் பங்கேற்றவுள்ளனா்.

