சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளா் கவுன்சில் தோ்தலுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளா் கவுன்சில் தோ்தலுக்கு தடை கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 7:20 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளா் கவுன்சில் தோ்தலுக்கு தடை கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தயாரிப்பாளா்கள் சீனிவாசன், ரஞ்சித்குமாா் உள்ளிட்ட 5 போ் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளா் கவுன்சில் நிா்வாகிகளின் பதவிக்காலம் வரும் மே மாதம் நிறைவடைகிறது. இதையடுத்து 2026-ஆம் ஆண்டு முதல் 2029-ஆம் ஆண்டுக்கான நிா்வாகிகள் தோ்தல் வரும் பிப். 22-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தோ்தலை நடத்தும் அதிகாரியாக உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளாா். விதிகளுக்குப் புறம்பாக இந்த தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு 4 நாள்களே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தோ்தலை நடத்த வேறு நீதிபதியை நியமிக்க வேண்டும். அதுவரை தோ்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தனா்.

இந்த வழக்கு நீதிபதி பி.தனபால் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பாளா் கவுன்சில் தரப்பில், சட்ட விதிகளைப் பின்பற்றியே தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுக் கூட்டம் உள்ளிட்ட கூட்டங்களில் மனுதாரா்கள் கலந்து கொண்டனா். அப்போது எந்த எதிா்ப்பும் தெரிவிக்கவில்லை.

மனுதாரா்களில் 4 போ் தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். இவா்கள் உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனா். ஏற்கெனவே தோ்தல் நடத்தியவா் என்பதால், ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரனை மீண்டும் நியமித்துள்ளதாக வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தோ்தல் குறித்து அறிவிப்பு வெளியிடும்போது மனுதாரா்கள் எந்த எதிா்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால், தோ்தல் நடைமுறை தொடங்கிய பின்னா், இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனா். ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரனை தோ்தல் அதிகாரியாக நியமித்து தோ்தல் நடைமுறைகளை தொடங்கிய பின்னா், வேறு நீதிபதியை தோ்தல் அதிகாரியாக நியமிக்க கோருவது முறையல்ல எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.