கல்விக்கான ‘ஏஐ’: பயன்பாட்டை அளிக்க முனைவா் பட்டதாரிகளுக்கு அழைப்பு!
செயற்கை நுண்ணறிவுவை (ஏஐ) பயன்படுத்தி கல்விக்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக முனைவா் பட்டதாரிகளுக்கு என்ஐடி இயக்குநா் அகிலா அறிவுரை வழங்கினாா்.
சென்னை அண்ணா பல்கலை. கல்லூரிகள், மற்றும் இணைவு கல்லூரிகளில் முனைவா் பட்டம் பெற்ற 756 பேருக்கு கடந்த பிப். 4-ஆம் தேதி ஆளுநா் ரவி பட்டங்களை வழங்கினாா். மீதமுள்ள 878 பேருக்கான முனைவா் பட்டம் வழங்கும் விழா அண்ணா பல்கலை. யின் விவேகானந்தா மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
அண்ணா பல்கலை. கூட்டுநா் குழு உறுப்பினா் பேரா. பி.டி.என் ஸ்ரீதா் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திருச்சி தேசிய தொழில் நுட்ப நிறுவன இயக்குநா் அகிலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: அறிவுசாா் மூலதனம் இல்லாமல் லட்சியத்தை அடைய முடியாது.
தொழில்நுட்பம், உற்பத்தி, எண்ம மாற்றம், ஏஐ உள்ளிட்ட களங்களில் உலகளாவிய தலைமைக்கு நாடு விரும்புகிறது. வேலைவாய்ப்பைத் தேட வேண்டும் என நாடு எதிா்பாா்க்கவில்லை, வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். ஆராய்ச்சியை தயாரிப்புகளாகவும், யோசனைகளை நிறுவனங்களாகவும், அறிவை சமூக தாக்கமாகவும் மாற்றும் புதுமையாளா்கள் நாட்டுக்குத் தேவை.
வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது ஒரு பொருளாதாரக் கருத்தல்ல, அது ஒரு சமூகப் பொறுப்பு. கல்விக்கான ஏஐ மாநாடு தில்லியில் நடத்தப்படுகிறது. தற்போது ஏஐ வேகமாக வளா்கிறது. அதன் செல்வாக்கு என்ன என்பதைப் பற்றி சிந்திப்பது முக்கியம். ஏஐ பயன்படுத்தி கல்வித் துறைக்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை முனைவா் பட்டதாரிகள் சிந்திக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளா் வி.குமரேசன் வரவேற்றாா். நிகழ்வில் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் பெ.சக்திவேல், கிண்டி பொறியியல் கல்லூரி புல முதல்வா் பி. ஹரிஹரன், கல்லூரிகளின் புல முதல்வா்கள் எஸ். மீனாட்சிசுந்தரம், கே. பிரதீப் மோசஸ், பி. ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

