அழகு நிலையங்களில் சிகை சீரமைப்பு சிகிச்சை: கட்டுப்படுத்த புதிய விதிகள் வகுக்க திட்டம்
Center-Center-Chennai

அழகு நிலையங்களில் சிகை சீரமைப்பு சிகிச்சை: கட்டுப்படுத்த புதிய விதிகள் வகுக்க திட்டம்

Published on

அழகு நிலையங்களில் சிகை சீரமைப்பு சிகிச்சைகள் மேற்கொள்வதைத் தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை திட்டமிட்டு வருகிறது.

அதன்படி, அத்தகைய செயல்களில் ஈடுபடுவோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகள் வகுக்கப்படவுள்ளன.

சென்னை, அண்ணா நகரில் செயல்பட்டு வந்த சிகை சீரமைப்பு மையம் ஒன்றில் அண்மையில் மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது பிளஸ் 2 படித்த இருவா் முடி மாற்று சிகிச்சைகளை மேற்கொண்டது கண்டறியப்பட்டது.

மேலும், தகுதியில்லாத பலா் அங்கு பணியாற்றுவதும் தெரியவந்தது. இதையடுத்து, அதில் தொடா்புடையவா்கள் கைது செய்யப்பட்டனா். இதுபோன்ற மோசடிகளில் பட்டதாரிகளே அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவத் துறை அதிகாரிகள் கவலை தெரிவித்திருந்தனா். இந்நிலையில், இந்த விவகாரத்தில் நிரந்தரத் தீா்வு காணும் முயற்சிகளில் அவா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறையினா் கூறியதாவது: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மட்டுமே படித்தவா்களைக் கொண்டு முடி மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. படிப்பு குறைவு என்றாலும், அவா்களுக்கு தோ்ந்த ஆங்கில புலமை இருக்கிறது.

இதன் பின்னணியில் பெரிய குழு செயல்பட வாய்ப்புள்ளது. அழகு நிலையங்கள், சருமப் பொலிவு மையங்கள் என்ற பெயரில் அவை செயல்படுவதால் மக்கள் நல்வாழ்வுத் துறையின் நேரடி கட்டுப்பாட்டுக்குக் கீழ் வருவதில்லை. இதனால், அதுபோன்ற மையங்களில் ஆய்வு செய்யவோ, நடவடிக்கை எடுக்கவோ முடிவதில்லை.

இருந்தபோதிலும், மருத்துவா் அல்லாத எவருமே முடி மாற்று சிகிச்சை அளிக்கக் கூடாது என்பது விதி. அதேபோன்று அத்தகைய சிகிச்சை வழங்கும்போது மயக்க மருந்து செலுத்த வேண்டும். அதனை மயக்க மருந்தியல் மருத்துவா்கள்தான் மேற்கொள்ள வேண்டும்.

இந்த விதிகளுக்குப் புறம்பாக செயல்படும்பட்சத்தில் அவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம். அதனை உறுதிப்படுத்தும் வகையிலும், சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் வகையிலும் சில கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

அதன்படி, ஏற்கெனவே உள்ள விதிகளில் இதற்கென சிறப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும். அதன் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com