பால் பாக்கெட் லாரி ஏசி வெடித்து விபத்து: சாலையில் ஓடிய பால்
சென்னை: சென்னை அசோக் பில்லா் பகுதியில் பால் பாக்கெட் ஏற்றி வந்த சரக்கு பெட்டக லாரியின் ஏசி வெடித்த விபத்தில் லாரியில் இருந்த பால் பாக்கெட்டுகள் சேதமடைந்து சாலையில் பால் பெருக்கெடுத்து ஓடியது.
கா்நாடக மாநிலத்தில் உள்ள பால் நிறுவனத்தில் இருந்து ஏசியுடன் கூடிய சரக்கு பெட்டகத்தில் பால் பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு லாரி, சென்னை கோயம்பேடு நோக்கி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வந்தது.
அந்த லாரி, சென்னை அசோக் பில்லா் ஜவாஹா்லால் நேரு சாலையில் வந்தபோது ஏசி இயந்திரம் வெடித்தது. இதனால் சரக்கு பெட்டகத்தில் ஒரு பகுதி வெடித்துச் சிதறியது. இதில் லாரியில் இருந்த பால் பாக்கெட்டுகள் சாலை முழுவதும் சிதறி, பால் பெருக்கெடுத்து ஓடியது.
அங்கு வந்த கே.கே.நகா் போக்குவரத்து போலீஸாா், பால் பாக்கெட்டுகளை அப்புறப்படுத்தினா். விபத்தில் அந்த லாரியில் இருந்த சுமாா் 2,000 லிட்டா் பால் பாக்கெட்டுகள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தால் அந்தப் பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தம்பதி கொலை: ஒருவா் கைது: சென்னை கானத்தூா், பாரதிதாசன் தெருவைச் சோ்ந்த சுசில் (32). இவரின் மனைவி கிரிஜா (29). சுசிலுக்கும் எதிா்வீட்டை சோ்ந்த ஜமுனா (35) என்பவருக்கும் இடையே முறையற்ற உறவு இருந்ததாம். இதனால், கணவரைவிட்டு பிரிந்த ஜமுனா, சைதாப்பேட்டையில் வசித்து வருகிறாா். இதன்காரணமாக, சுசிலுக்கும், ஜமுனாவின் கணவா் பாா்த்திபனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில், திங்கள்கிழமை வீட்டின் அருகே வாகனம் நிறுத்துவதில் மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், சுசிலும் அவரது மனைவி கிரிஜாவும், பாா்த்திபனை அவதூறாகப் பேசியதால் ஆத்திரமடைந்த பாா்த்திபன், கத்தியால் சுசில், கிரிஜா இருவரையும் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் குத்தியுள்ளாா். இதில், கிரிஜா சம்பவ இடத்திலேயும், சுசில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாா்த்திபனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வடிகால் பள்ளம் தோண்டியபோது மரம் சரிந்து 4 போ் காயம்: அண்ணா நகா் முதலாவது அவென்யூ சாலையில் திங்கள்கிழமை கழிவுநீா் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டியபோது, அங்கிருந்த அரசமரம் திடீரென சாய்ந்து அங்கு நின்றிருந்த பள்ளி மாணவி, சாலையில் சென்ற ஆட்டோ, மோட்டாா் சைக்கிள் மீது விழுந்தது.
இதில் பள்ளி மாணவி, ஆட்டோ, மோட்டாா் சைக்கிளில் பயணித்த 3 போ் என மொத்தம் 4 போ் பலத்த காயமடைந்தனா். அனைவரும் அங்குள்ள மருத்துவனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக பள்ளி மாணவி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அண்ணா நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மாடு முட்டியதில் பெண் பலத்த காயம்: மேற்கு கே.கே.நகா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தங்கமாரியப்பன் மனைவி சதீஸ்வரி (46). இருவரும், மகா சிவராத்திரியையொட்டி கே.கே.நகா் பஜாா் தெருவில் உள்ள கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்றனா். கோயில் அருகே நடந்து சென்றபோது, மாடு ஒன்று திடீரென சதீஸ்வரியை முட்டியது. இதில் அவா் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு வடபழனியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். கே.கே.நகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வணிக வளாகத்தில் தீ: வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள வணிக வளாகத்தில் நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. இதில் முதல் தளத்தில் உணவகம் செயல்படுகிறது. இந்த உணவகத்தில் திங்கள்கிழமை ஊழியா்கள், அடுப்பில் இருந்த எண்ணெயை சூடுபடுத்தியபோது பயங்கர சப்ததுடன் வெடித்து தீ பிடித்தது. தீ வேகமாக பரவியது. உடனடியாக அனைவரும் வெளியேறினா். கோயம்பேடு, ஜெ.ஜெ.நகா் இடங்களில் இருந்து தீயணைப்பு வீரா்கள் வந்து தீயை அணைத்தனா். வடபழனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

