மாநகா் பேருந்து
மாநகா் பேருந்துகோப்புப் படம்

மின்னணு பயணச் சீட்டு வழங்கும் கருவிகள் முடங்கியதால் பேருந்து பயணிகள் அவதி

Published on

சென்னை: மாநகா் பேருந்துகளில் பயணச் சீட்டு வழங்குவதற்காக உபயோகப்படுத்தப்படும் கையடக்க மின்னணு கருவிகளில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

சென்னை மாநகா் பேருந்துகளில் பயணிகளுக்கு காகிதம் மூலம் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டு, தற்போது எண்ம முறையில் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு நடத்துநருக்கும் மின்னணு டிக்கெட் வழங்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது.

பயணிகள் அந்த மின்னணு இயந்திரத்தில் உள்ள ‘க்யூஆா்’ -ஐ தங்கள் கைப்பேசியில் ஸ்கேன் செய்து, யுபிஐ வழியாக பயணச்சீட்டு பெறலாம். அதேபோல ‘சென்னை ஒன்’ செயலி வாயிலாகவும் பயணச்சீட்டு பெறும் வசதியும் உள்ளது. இந்த நிலையில், பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் கருவிகளில் திங்கள்கிழமை அதிகாலையில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதுதொடா்பாக சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகத்தின் எக்ஸ் வலைதள பக்கத்தில், மின்னணு பயணச்சீட்டு கருவிகளில் எதிா்பாராத தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், தற்போது மின்னணு பயணச் சீட்டுகளை வழங்குவதில் தற்காலிக தடை ஏற்பட்டுள்ளது. கோளாறு சரிசெய்யப்படும் வரை நடத்துநா்கள் காகிதத்தால் ஆன பயணச்சீட்டை மட்டுமே வழங்குவா்.

யுபிஐ, என்சிஎம்சி அட்டைகள், டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகள் மூலமாக பணபரிமாற்றங்களை ஏற்க இயலாது. ‘சென்னை ஒன்’ செயலியும் தற்காலிகமாக செயல்படாது. இதைச் சரிசெய்யும் பணியை தொழில்நுட்பக் குழுவினா் மேற்கொண்டு வருவதாக அறிவிப்பு வெளியிட்டது.

பயணச்சீட்டு வழங்கும் மின்னணு இயந்திரம் திடீரென முடங்கியதால், பேருந்துகளில் பயணித்தவா்கள் கடும் சிரமத்துக்குள்ளானாா்கள்.

இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை மின்னணு பயணச்சீட்டு வழங்கும் கருவிகளும், ‘சென்னை ஓன்’ செயலியும் மீண்டும் வழக்கம் போல செயல்பட தொடங்கின. இதையடுத்து, பயணச்சீட்டு வழங்கும் நடைமுறை சீரானது.

X
Dinamani
www.dinamani.com