

சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.200 கோடியில் பாதுகாப்பு வழித்தடங்கள் அமைக்கப்படவுள்ளதாக மேயர் ஆர்.பிரியா நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சியின் 2026-27-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், மாநகராட்சியின் 17 துறைகளின் கீழ் புதிதாக 90 திட்ட அறிவிப்புகளை மேயர் ஆர்.பிரியா வெளியிட்டார்.
கல்வித் துறை: சென்னையில் 100-க்கும் அதிகமான மாணவர்கள் உள்ள 180 பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படவுள்ளனர்.
பிளஸ் 2 மாணவர்கள் 5,314 பேருக்கு ரூ.6 கோடியில் சிறப்புப் பயிற்சி; மாநகராட்சி பள்ளியில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை ரூ.1.90 கோடியில் யோகா, தற்காப்புக் கலைப் பயிற்சி;
8 முதல் 10-ஆம் வகுப்பு வரையில் 24,118 மாணவர்களுக்கு தமிழ்-ஆங்கில அகராதி; 46 உயர்நிலைப் பள்ளிகளுக்கு 17 உளவியல் ஆலோசகர்கள் நியமனம்; தசைத்திறன் குழந்தைகளுக்கு 14 மண்டலங்களில் சிறப்பு பள்ளிகள்; இடைநின்ற மாணவர்களுக்கு 3 இடங்களில் சிறப்பு இணைப்புப் பயிற்சி; பள்ளிகளுக்கு புதிய பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொது சுகாதாரம்: 360 சுகாதார மையங்களில் கருப்பை வாய் புற்றுநோய் வைரஸை கண்டறியும் சோதனை; அனைத்து மண்டல சுகாதார மண்டலங்களிலும் எக்ஸ்ரே இயந்திரத்தில் ஏஐ மூலம் ஆய்வறிக்கை பெறும் வகையில் ரூ.1 கோடியில் உபகரணங்கள்; காசநோய் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு புதிய கட்டடம்; தெருநாய்களுக்கு ரூ.3.50 கோடியில் தடுப்பூசி திட்டம்; கொசுத் தொல்லையைக் கட்டுப்படுத்த ஆண்டுக்கு ரூ.25 கோடி என ரூ.75 கோடியில் கொசுப்புழு அடர்த்தி நிகழ்நேர கண்காணிப்பு திட்டம்; மகப்பேறு மருத்துவமனைகளுக்கு புதிய உபகரணங்கள்; 3 சமுதாய நல மருத்துவமனையில் இயற்கை மருத்துவ சிகிச்சை; அவசர மகப்பேறு மையங்களுக்கு 19 கதிரியக்க நிபுணர்கள் நியமனம்.
திடக்கழிவு மேலாண்மை: பெருங்குடியில் 20 ஏக்கரில், ஆயிரம் டன் அளவிலும், மணலியில் 50 டன் அளவிலும் உரம் தயாரிப்பு மையம்; கோடையில் தூய்மைப் பணியாளர்களுக்கு மோர் வழங்கும் திட்டம்.
காற்றுமாசை தடுக்கும் வாகனங்கள்: காற்று தூசை தண்ணீரால் படியவைக்க ரூ.3.56 கோடியில் 6 வாகனங்கள்; பல்வேறு பயன்பாட்டுக்கு இயற்கை எரிவாயுவில் இயங்கும் 50 வாகனங்கள்; 200 பூங்காக்களில் ரூ.60 கோடியில் இயற்கை சூழலை ஏற்படுத்தும் திட்டம்; 5 பூங்காக்களில் ரூ.10 கோடியில் சிறப்பு குழந்தைகளுக்கான சாதனங்கள்; மக்களுக்கு இலவச மரக்கன்று வழங்கும் ரூ.10 கோடியில் பசுமைச் சென்னை திட்டம்.
மழைநீர் வடிகால், சிறப்புத் துறைகள்: ரூ.100 கோடியில் நீர்நிலை புனரமைப்புத் திட்டம்; 9 பேருந்து பணிமனைகள் ரூ.110 கோடியில் சீரமைப்பு; பக்கிங்ஹாம் கால்வாயில் ரூ.45 கோடியில் நகர்ப்புற பசுமையாக்கல் திட்டம்.
பள்ளி பாதுகாப்பு வழித்தடம், ரோப்கார்: ரூ.200 கோடியில் 50 கி.மீ. சென்னை பள்ளிகளுக்கு பாதுகாப்பான வழித்தடங்கள். நொளம்பூர் உள்ளிட்ட 3 ஏரிகள் ரூ.35 கோடியில் சீரமைப்பு; மெரீனாவில் ரோப்கார் திட்டம்; நகரில் புதிய பாலங்கள்.
இரவுக் காப்பகங்கள்: வீடில்லாதவர்கள் தங்குவதற்கு ரூ.9 கோடியில் 6 இடங்களில் இரவுக் காப்பகங்கள்; ரூ.12 கோடியில் 200 தற்காலிக தங்குமிடங்கள் (கண்டெய்னர் கொள்கலன் வீடுகள்); மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவருக்கு ரூ.1 கோடியில் புதிதாக சமூக-பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு; சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.15 கோடியில் நடமாடும் இயந்திரங்கள்; நீர்நிலைகளை கண்காணிக்க ரூ.10 கோடியில் ஏஐ தொழில்நுட்பத்துடன் ட்ரோன் ஆய்வு அமைப்பு உள்ளிட்ட புதிய திட்டங்களை மேயர் அறிவித்துள்ளார்.
பற்றாக்குறை ரூ.1,602 கோடி; கடன் ரூ.2,000 கோடி
சென்னை மாநகராட்சியின் 2026-27-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மேயர் ஆர்.பிரியா 90 சிறப்புத் திட்டங்களை அறிவித்தார். இதைத் தொடர்ந்து, மாநகராட்சி நிதி மற்றும் வரிவிதிப்பு நிலைக் குழுத் தலைவர் சர்பஜெயதாஸ் நரேந்திரன் வரவு, செலவுகளை தாக்கல் செய்தார்.
அப்போது அவர் குறிப்பிட்டதாவது:
சென்னை மாநகராட்சியின் 2026-27-ஆம் ஆண்டுக்கான மொத்த வரவுகள் ரூ.7,717 கோடி. மொத்த செலவுகள் ரூ.9,319 கோடி. பற்றாக்குறை ரூ.1,602 கோடி. கடந்த 2025-2026-ஆம் ஆண்டில் மொத்த வரவுகள் ரூ.9,023 கோடியாகவும், மொத்தச் செலவுகள் ரூ.10,693 கோடியாகவும், பற்றாக்குறை ரூ.1,670 கோடியாகவும் இருந்தன. பற்றாக்குறை கடந்த ஆண்டைவிட நிகழாண்டு ரூ. 68 கோடி குறைந்துள்ளது.
மாநகராட்சியில் உட்கட்டமைப்புப் பணிகளுக்காக 2025-26-ஆம் ஆண்டில் ரூ.2,145.47 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, பள்ளிக் கட்டடம், அங்கன்வாடி மையங்கள், வெள்ளத்தடுப்பு மேம்பாட்டுப் பணிகள், மாட்டுத்தொழுவம், முதல்வர் படைப்பகம் என ரூ.607.24 கோடி மதிப்பிலான 211 பணிகள் நடைபெற்று வருகின்றன.
நீலக்கொடி கடற்கரை, மேம்பாலம், சாலைப் பணி என ரூ.449.45 கோடி மதிப்பிலான 60 பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைநீர் வடிகாலுக்கு ரூ.758.23 கோடியில் 397 பணிகளும், 242 பேருந்து சாலைகளைச் சீரமைக்க ரூ.330.55 கோடியும் வழங்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார்.
கடன் தொகை: நிதிநிலை அறிக்கையில், கடந்த ஆண்டு கடன் தொகை ரூ.1,595 கோடி எனக் கூறப்படுகிறது. அதற்கு ஆண்டுக்கு ரூ.74.11 கோடி வட்டி செலுத்தப்படுகிறது. 2026-27-ஆம் ஆண்டு ரூ.2,000 கோடி கடன் தொகை உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு ரூ.92.20 கோடி கடன் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
மயக்கமடைந்த மண்டலத் தலைவர்
மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை கூட்டம் தமிழ்த் தாய் வாழ்த்து, திருக்குறள் மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியுடன் தொடங்கியது. காலை 11.35 மணியளவில் மணலி மண்டலத் தலைவர் ஆறுமுகம் கூட்டரங்கில் அமர்ந்திருந்தபோது, வாயில் நுரை தள்ளியபடி மயங்கினார். உடனே மேயர் அறிவிப்புகளை வெளியிடுவதை நிறுத்தினார். துணைமேயர் மருத்துவ உதவிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். சுகாதாரப் பிரிவு தலைவர் உள்ளிட்டோர் மண்டலத் தலைவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நாளை விவாதம்: சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை மீதான உறுப்பினர்கள் விவாதம் வெள்ளிக்கிழமை (பிப்.20) நடைபெறும் என மேயர் அறிவித்தார்.
சாலை மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு
சென்னை மாநகராட்சியில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மூலதனத் திட்டங்களில் பேருந்து சாலை மேம்பாட்டுக்கு கடந்த 2025-26 ஆம் ஆண்டு ரூ.311.60 கோடி ஒதுக்கிய நிலையில், நிகழாண்டு ரூ.725.06 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மழைநீர் வடிகாலுக்கு கடந்த ஆண்டு 1,290.05 கோடி ஒதுக்கிய நிலையில், தற்போது ரூ.693.05 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மைக்கு ரூ.323 கோடி; புதிதாக அமைத்தல் மற்றும் பழைய பாலம் விரிவாக்கத்துக்கு ரூ.130 கோடி; தகவல் தொழில்நுட்பத்துக்கு ரூ.12.31 கோடி; மின்சாரப் பணிகளுக்கு ரூ.41.34 கோடி; கனரக வாகனங்கள், அலுவலர்களுக்கான கார்கள், கடற்கரை தூய்மை இயந்திரம் ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்வித் துறையில் பள்ளிகளுக்கான சாய்வு மேஜைகள், ஆய்வக உபகரணங்கள், கணினிகள் உள்ளிட்டவற்றுக்கு 2025-26-ஆம் ஆண்டில் ரூ.26.30 கோடி ஒதுக்கிய நிலையில், நிகழாண்டு ரூ.11.13 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு ரூ.4.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறப்புத் திட்டங்களுக்கு கடந்த ஆண்டு ரூ.157.53 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், நிகழாண்டு ரூ.85.03 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.