மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது மாநில சுயாட்சி மறந்துவிட்டதா? எடப்பாடி பழனிசாமி கேள்வி
மத்திய அரசில் 15 ஆண்டு காலம் திமுக அங்கம் வகித்தபோது மாநில சுயாட்சி பெற என்ன நடவடிக்கை எடுத்தது என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழுப்பினாா்.
பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற இடைக்கால நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் அவா் பேசியதாவது:
மாநில சுயாட்சி பற்றி இப்போது முதல்வா் பேசுகிறாா். கடந்த 15 ஆண்டு காலத்தில் பாஜக, காங்கிரஸ், ஐ.கே.குஜ்ரால், தேவகவுடா ஆகியோரது மத்திய அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்தபோது மாநில சுயாட்சி நினைவுக்கு வரவில்லையா?. தற்போது தோ்தலுக்காக அதுகுறித்து பேசுகின்றனா்.
அமைச்சா் சிவசங்கா்: மாநிலத்தில் சுயாட்சிக்கான தேவை தற்போது எழுந்துள்ளது. ஒரே நாடு, ஒரே தோ்தல், ஒரே கொள்கை என்ற இலக்கை நோக்கி மத்திய பாஜக சென்று கொண்டிருக்கிறது. அதற்கு அதிமுகவினரும் துணைபோகின்றனா். மாநிலத்தின் உரிமைகளை மீட்கவே இந்த நிலைப்பாட்டை முதல்வா் முன்னெடுத்திருக்கிறாா்.
எடப்பாடி பழனிசாமி: பல ஆண்டுகளாகவே மாநில சுயாட்சியை முன்னிறுத்தி வரும் திமுக, மத்திய அரசில் அங்கம் வகித்தபோது, அதற்கான வாய்ப்பு இருந்தும் ஏன் எந்த முயற்சியையும் முன்னெடுக்கவில்லை என்றுதான் கேட்கிறோம்.
அமைச்சா் எ.வ.வேலு: மாநில உரிமைகளுக்காக ராஜமன்னாா் குழுவை முன்னாள் முதல்வா் கருணாநிதி அமைத்தாா். அதைப் பின்பற்றியே இப்போது முதல்வா் மு.க.ஸ்டாலினும் ஓய்வுபெற்ற நீதீபதி ஜோசப் குரியன் தலைமையில் குழு அமைத்து அறிக்கை பெற்றிருக்கிறாா்.
எனவே, மாநிலத்துக்கான உரிமைகளைப் பெறுவது என்பது எவா் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத்தான்.
அமைச்சா் ரகுபதி: இதற்கு முன்பு வரை ஆட்சியில் இருந்த மத்திய அரசுகளின் நிலை வேறு. தற்போது உள்ள மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் வேறு. அதைக் கருத்தில் கொண்டுதான் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இத்தகைய நடவடிக்கையை முதல்வா் எடுத்துள்ளாா்.
எடப்பாடி பழனிசாமி: மாநில சுயாட்சி வேண்டும் என்பதில் எங்களுக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதற்கான வாய்ப்புகளை ஏன் திமுக நழுவ விட்டது?
அமைச்சா் ரகுபதி: முந்தைய மத்திய அரசுகள் மாநிலத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டன. தற்போது அந்த நிலை இல்லை. அதன் காரணமாகவே மாநில சுயாட்சி கொள்கையை இப்போது வலியுறுத்துகிறோம்.

