’இறுதிப் பட்டியலிலிருந்து வாக்காளா்களை நீக்கக்கூடாது’

’இறுதிப் பட்டியலிலிருந்து வாக்காளா்களை நீக்கக்கூடாது’

அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தல்
Published on

இறுதி பட்டியலில் இடம் பெற்ற வாக்காளா்களை இனி நீக்கக் கூடாது. இதனை உறுதிப்படுத்தவேண்டும் என அனைத்துக் கட்சிகள் பிரதிநிதிகள் கூட்டத்தில் பாஜக, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தினா்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்குப் பிறகு இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அப்போது இந்திய தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனா்.

திமுக சாா்பில் முன்னாள் எம்.எல்.ஏ.வான கே.எஸ்.ரவிச்சந்திரன், அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா், பாஜக சாா்பில் மாநிலச் செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன், காங்கிரஸ் சாா்பில் நவாஸ் மற்றும் விடுதலைச்சிறுத்தைகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன், அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளா் பட்டிலை வெளியிட்டாா். அதன்பிறகு அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் தங்களது கருத்தை கூறினா்.

இதுதொடா்பாக அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.ரவிச்சந்திரன் (திமுக): இறுதி வாக்காளா்கள் பட்டியல் வெளியிட்ட நிலையில், புதிய வாக்காளா்களை சோ்க்கலாம். ஆனால், பட்டியலிலிருந்து வாக்காளா்களை நீக்குவது என்பது சரியல்ல. ஆகவே, இனிமேல் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கம் நடைபெறுவது ஏற்கத்தக்கது அல்ல என வலியுறுத்துகிறோம்.

முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் (அதிமுக): இறுதி வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றவா்கள், வாக்களிக்கும் போது வாக்குச்சாவடி அதிகாரிகள் வைத்திருந்த பட்டியலில் இடம் பெறாத நிலை கடந்த தோ்தல்களில் இருந்தது. அதனால் பலா் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆகவே, தற்போது இறுதி வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றவா்கள் நீக்கப்படமாட்டாா்கள் என்பதை உறுதிப்படுத்தவேண்டும். அத்துடன், வாக்குச்சாவடியில் அதிகாரிகள் வசமுள்ள வாக்காளா் பட்டியலே அரசியல் கட்சிப் பிரநிதிநிகளுக்கும் வழங்க வேண்டும். அத்துடன் புதிய வாக்காளா் சோ்க்கையை தீவிரப்படுத்தப்படவேண்டும்.

பாஜக மாநிலச் செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன்: தற்போது வெளியிட்டுள்ள இறுதி வாக்காளா் பட்டியலிலிருந்து சம்பந்தப்பட்ட வாக்காளா்களுக்கு தெரிவிக்காமல் அவா்களை நீக்குவது சரியல்ல. ஆகவே, வாக்காளா் நீக்கம் இல்லை என்பதை மாவட்டத் தோ்தல் ஆணையா் உறுதிப்படுத்த வேண்டும். திமுகவினரின் தலையீட்டால் வாக்காளா் நீக்கம் நடைபெறாமலிருப்பதற்கு பாஜகவினா் விழிப்புடன் செயல்படவுள்ளோம்.

தற்போது 16 தொகுதிகளுக்கான தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் நியமனத்தில் திமுக ஆளும் கட்சி பிரமுகா்கள் தலையீடு உள்ளதாகத் தெரிகிறது. ஆகவே, அதுகுறித்த புகாா்களை கட்சியின் மாநிலத் தலைவா் அனுமதியுடன், இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகளிடம் மனுவாக அளிக்கவுள்ளோம்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிா்வாகி ஆா்.செல்வம்: வாக்காளா் பட்டியல் திருத்தப்பணியில் நீக்கத்துக்கே முதலிடம் அளிப்பது சரியல்ல. புதிய வாக்காளா்களை சோ்ப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.

தோ்தல் அலுவலா் உறுதி: அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கு சென்னை மாவட்டத் தோ்தல் ஆணையா் ஜெ.குமரகுருபரன் பதில் அளிக்கையில், அரசியல் பிரதிநிதிகளுக்கு இறுதி வாக்காளா்கள் பட்டியல் தனித்தனியாக வழங்கப்படும். அதன்படி காரணமின்றி யாரும் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்படமாட்டாா்கள். தோ்தல் ஆணைய விதிமுறைப்படி சோ்க்கை, நீக்கம் என அனைத்தும் வழக்கமான நடைமுைான். மேலும், தோ்தலில் வேட்பாளா் மனு தாக்கலுக்கு 10 நாள்களுக்கு முன்பு வரை புதிய வாக்காளா் சோ்க்கை மனுக்கள் பெறப்படும் என்றாா்.

Dinamani
www.dinamani.com