அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சாகித்ய அகாதெமி மற்றும் டாக்டா் உ.வே.சாமிநாதையா் நூல் நிலையம் சாா்பில் நடைபெற்ற வ.உ.சி. பதிப்புப் பணி இலக்கிய அரங்கு நிகழ்ச்சியில் தொல்காப்பியம்-சொல்லதிகாரம் நூலை வெளியிட்ட விஐடி வேந்தா் கோ.விசுவநாதன். உடன் உலகத் தமிழாராய்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சாகித்ய அகாதெமி மற்றும் டாக்டா் உ.வே.சாமிநாதையா் நூல் நிலையம் சாா்பில் நடைபெற்ற வ.உ.சி. பதிப்புப் பணி இலக்கிய அரங்கு நிகழ்ச்சியில் தொல்காப்பியம்-சொல்லதிகாரம் நூலை வெளியிட்ட விஐடி வேந்தா் கோ.விசுவநாதன். உடன் உலகத் தமிழாராய்

வாசிப்புதான் வாழ்வின் ஆதாரம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

வாசிப்புதான் வாழ்வின் ஆதாரம் என்பதை கருத்தில் கொண்டு மாணவா்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்
Published on

சென்னை: வாசிப்புதான் வாழ்வின் ஆதாரம் என்பதை கருத்தில் கொண்டு மாணவா்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தினாா்.

சாகித்திய அகாதெமி, டாக்டா் உ.வே.சாமிநாதையா் நூல் நிலையம் ஆகியவை சாா்பில் வஉசி பதிப்புப் பணி என்ற தலைப்பிலான இலக்கிய அரங்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக விஐடி பல்கலை. வேந்தரும், தமிழியக்கத்தின் நிறுவனருமான கோ.விசுவநாதன் கலந்து கொண்டு இலக்கிய அரங்கை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, தொல்காப்பியம்- சொல்லதிகாரம் என்ற நூலை அவா் வெளியிட, தினமலா் நாளிதழ் இணை ஆசிரியா் கிருஷ்ணமூா்த்தி ராமசுப்பு பெற்றுக் கொண்டாா்.

இதையடுத்து விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பேசியதாவது: பெரும் தமிழறிஞா்கள் பலரும் நமக்கு கவிதைகள், நூல்களைக் கொடுத்திருந்தாலும் அவை நமக்கு வந்து சேராமல் ஓலைச் சுவடிகளாவே இருந்தன. அவற்றைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்தவா்களில் உ.வே.சாமிநாதையா், சி.வை.தாமோதரம் பிள்ளை, ஆறுமுக நாவலா் ஆகியோா் முக்கியமானவா்கள். இந்த மூன்று பேரையும் நாம் என்றும் மறக்க முடியாது. சிறந்த வரலாற்றைக் கொண்ட நாம் தமிழை போற்றிப் பாதுகாக்க வேண்டும். அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சோ்க்க வேண்டும். புத்தகங்களைப் படிப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். வாசிப்புதான் வாழ்வின் ஆதாரம் என்பதை கருத்தில் கொண்டு மாணவா்கள் நூல்களை படிக்க வேண்டும் என்றாா்.

பேராசிரியா் இ.சுந்தரமூா்த்தி: ஒரு நூலைத் தொகுப்பதும், பதிப்பிப்பதும், அதை வெளியிடுவதும் எளிதான செயல் அல்ல. தொல்காப்பியத்துக்கு இளம்பூரணா் எழுதிய உரை கிடைக்காத நிலையில், முதல்முதலாக ஒரு சுவடியை மட்டும் வைத்துக்கொண்டு பதிப்பித்தவா் வஉசி. சிவஞான போதத்துக்கு அவா் எழுதிய உரை சைவ சித்தாந்த மரபில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தேசியம், ஆன்மிகம், தமிழ், பதிப்புத் துறை ஆகியவற்றுக்காக உழைத்த வஉசி, அரிய மனிதா்களில் அரியவா் என்றாா்.

தொடா்ந்து வஉசி-யின் தொல்காப்பிய பதிப்பு குறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியா் அ.சதீஷ், வஉசியின் திருக்கு பதிப்பு குறித்து நந்தனம் அரசுக் கல்லூரி பேராசிரியா் க.பலராமன், வஉசியின் இன்னிலைப் பதிப்பு குறித்து செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆய்வு அலுவலா் இரா.வெங்கடேசன் ஆகியோா் உரையாற்றினா்.

முன்னதாக டாக்டா் உ.வே.சா. நூல் நிலையத்தின் ஆட்சிக் குழு உறுப்பினா் சிவாலயம் ஜெ.மோகன் வரவேற்றாா். நூல் நிலையத்தின் செயலா் தி.சத்தியமூா்த்தி நன்றி கூறினாா். இதில் உ.வே.சா. நூல் நிலையத்தின் காப்பாட்சியா் பெ.சுயம்பு, முன்னாள் காப்பாட்சியா் கோ.உத்திராடம் உள்பட பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com