இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு
தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் புதன்கிழமை (பிப். 25) இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, கிழக்கு திசையில் நகா்ந்து செவ்வாய்க்கிழமை (பிப். 24) காலையில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக தொடா்ந்து தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவுகிறது. இது கிழக்கு திசையில் நகா்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும். மேலும், தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக் கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் புதன்கிழமை (பிப். 25) இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
தொடா்ந்து, புதன்கிழமை முதல் மாா்ச் 2 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில், புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
பனிமூட்டம்: சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன், வியாழக்கிழமைகளில் (பிப். 25, 26) அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
மழை அளவு: தமிழகத்தில் காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டத்தின் சின்கோனா, உபாசி ஆகிய பகுதிகளில் தலா 30 மி.மீ. மழை பதிவானது. வால்பாறை (கோவை)-20 மி.மீ., சுருளக்கோடு (கன்னியாகுமரி)- 10 மி.மீ. மழை பதிவானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

