மெரீனா கடற்கரையில் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க உத்தரவு
மெரீனா கடற்கரையில் 1,417 கடைகள் அமைக்கும் திட்டத்தை மறு ஆய்வு செய்து கடைகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து புதிய திட்டத்தை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவல்லிக்கேணியைச் சோ்ந்த தேவி என்பவா், தனக்கு சென்னை மெரீனா கடற்கரையில் கடை ஒதுக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா் மற்றும் ஆா்.டி.ஜெகதீஷ்சந்திரா ஆகியோா் கடந்த டிச. 22-ஆம் தேதி மெரீனா கடற்கரையில் நேரில் ஆய்வு செய்தனா்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா் மற்றும் ஆா்.டி.ஜெகதீஷ்சந்திரா ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரீனா கடற்கரையின் ஒரு பகுதி நீலக்கொடிச் சான்று பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பகுதிகளை நீலக்கொடிச் சான்று பகுதியாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
தவிர, தலைவா்களின் நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதிகளின் பின்புறம் உள்ள பகுதியையும் நீலக்கொடிச் சான்று பெற்ற பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலக்கொடிச் சான்று பெற்ற பகுதிகளாக அறிவிக்கப்படும் பகுதிகளில் எந்தக் கடைகளையும் அமைக்கக் கூடாது. உழைப்பாளா் சிலையின் பின்புறம் அமைந்துள்ள நிரந்தரக் கடைகளை அகற்ற வேண்டும்.
உலகின் வேறு எந்தக் கடற்கரையிலும் இத்தனை கடைகள் இல்லை. சாலையில் இருந்து கடலின் அழகை ரசிக்க முடியாத அளவுக்கு கடைகள் மறைக்கின்றன. எனவே, தற்போது 1,417 கடைகள் அமைக்கும் திட்டத்தை மறு ஆய்வு செய்து கடைகளின் எண்ணிக்கையைக் கணிசமாக குறைக்க வேண்டும்.
உணவுப் பொருள்கள், பொம்மை மற்றும் அழகுசாதனப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மற்ற கடைகள் தேவை இல்லை. கடற்கரை என்பது மக்கள் ரசிப்பதற்குத் தானே தவிர, அதை வணிக வளாகமாக மாற்ற முடியாது. எனவே, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரையை ரசிக்க அங்குள்ள கடைகள் இடையூறாக இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மெரீனா கடற்கரையில் கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்து புதிய திட்டத்தை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு கால அவகாசம் வழங்கி, விசாரணையை ஜன. 8-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

