முதலமைச்சரின் திறமைத் தேடல் தோ்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
முதலமைச்சரின் திறமைத் தேடல் தோ்வுக்கு விண்ணப்பிக்க ஜன. 6-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அரசுத் தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் (2025-2026) பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தோ்வு வரும் ஜன. 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று உரிய விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா்கள் இணையதளம் வழியாக ஜன. 3-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மாணவா்களின் நலன் கருதி அதிக மாணவா்கள் பயன் பெறும் வகையில் இதற்கான கால அவகாசம் ஜன. 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
