பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் அறக்கட்டளை சார்பில் விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்.
பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் அறக்கட்டளை சார்பில் விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்.

இந்திய கலாசாரத்தின் அடித்தளம் தமிழகம்: குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

இந்திய கலாசாரத்துக்கு அடித்தளமாக, தமிழக கலாசாரம் விளங்குகிறது என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Published on

இந்திய கலாசாரத்துக்கு அடித்தளமாக, தமிழக கலாசாரம் விளங்குகிறது என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் அறக்கட்டளை சார்பில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது. விழாவுக்கு முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே தலைமை வகித்தார்.

விழாவில், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி எங்கே சென்றாலும் தமிழ், தமிழரின் பெருமையை உயர்த்திப் பேசுகிறார். மகாத்மா காந்தியிடம் அடுத்த பிறவியில் எங்கே பிறக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, அவர் 'நான் தமிழகத்தில் பிறக்க விரும்புகிறேன்' எனப் பதில் அளித்தார். பிரதமர் மோடியும் 'எனக்கு தமிழ் தெரியவில்லை. மீண்டும் எனக்கு ஒரு பிறப்பு இருக்குமானால், நான் தமிழனாகப் பிறக்க விரும்புகிறேன்' என்றார்.

இந்திய கலாசாரத்துக்கு அடித்தளமாக இருப்பது தமிழக கலாசாரம்தான். ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இதுதான் அடித்தளம்.

உலகம் ஒன்றுதான் என்று முதல்முதலில் சொன்னவர் காரல் மார்க்ஸ்தான் என கருதவேண்டாம். அதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று தமிழ் புலவர் பாடினார்.

நாட்டில் பல்வேறு மொழிகள், பல்வேறு கலாசாரம் இருந்தபோதிலும் இந்தியா ஒற்றுமையான நாடாக உள்ளது. அனைத்து மதத்தினரும் சமமாக நடத்தப்படுகின்றனர்.

நமது நாடு வலிமை அடைய வேண்டும் என்பது, உலக நாடுகளை அச்சுறுத்துவதற்காக அல்ல. எந்த நாடும் இந்திய தேசத்தை அச்சுறுத்துவதற்கு கனவிலும்கூட நினைக்கக்கூடாது என்பதற்காகத்தான் என்றார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: தமிழருக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்க்கும் விதமாக பிரதமர் நரேந்திரமோடி, கோவையைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவராக ஆக்கியுள்ளார் என்றார்.

பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஏ.சி.சண்முகம், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், வேல்ஸ் பல்கலை. வேந்தர் ஐசரி கணேஷ், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் டாக்டர் சுதா சேஷய்யன், முன்னாள் நீதிபதிகள் டி.என்.வள்ளிநாயகம், ஜோதிமணி, ஏசிஎஸ் கல்வி குழும தலைவர் ஏசிஎஸ் அருண்குமார், இதயவியல் மருத்துவ சிகிச்சை நிபுணர் வி.சொக்கலிங்கம், நடிகர் கே.பாக்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

'கருத்து வேறுபாடு இல்லையென்றால் ஜனநாயகம் இல்லை'

கருத்து வேறுபாடு இல்லையென்றால் ஜனநாயகம் இல்லை என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வந்த அவருக்கு வரவேற்பு விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது:

நாம் அனைவரும் பல விஷயங்களில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம். எந்த ஒரு விஷயத்திலும் கருத்து வேறுபாடு இல்லை என்றால், அங்கு ஜனநாயகம் இருக்காது. அனைவரும் எல்லா நேரங்களிலும், ஒரே விஷயத்தில் உடன்பட்டால், அது வேறுபாடுகளுக்குத்தான் வழிவகுக்கும். அதேநேரம், நாம் மாறுபடும் விதம், சம்பந்தப்பட்ட விஷயங்களைச் செம்மைப்படுத்துவதாக இருக்க வேண்டும். கட்டாயத்தின்பேரில் யாரையும் எதிர்க்கக் கூடாது. அணுகுமுறையில் நேர்மறையாகவும், ஆக்கபூர்வமாகவும் இருப்பதுதான் சமூகத்துக்கு நல்லது.

மக்களவை உறுப்பினராக நான் இருந்தபோது, அவையில் எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் வாதங்களை, ஆளுங்கட்சியினர் எப்படி எதிர்கொள்கின்றனர், எல்லோரும் எப்படிப் பேசுகிறார்கள், முக்கிய பிரச்னைகளில் எங்கே விலகிச் செல்கின்றனர் என்பதைக் கூர்மையாக கவனித்தேன். அந்த அனுபவம் இப்போது மாநிலங்களவையைக் கையாளுவதற்கு உதவுகிறது என்றார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மீனவ, விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் குடியரசு துணைத் தலைவரை வரவேற்றுப் பேசினர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், ராணுவ அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com