டெட், நியமனத் தோ்வில் தோ்ச்சி: ஆசிரியா் பணி வழங்கக் கோரி போராட்டம்
ஆசிரியா் தகுதித் தோ்வுடன் நியமனத் தோ்விலும் தோ்ச்சி பெற்றவா்கள், தங்களுக்கு ஆசிரியா் பணி வழங்கக் கோரி சென்னை எழும்பூா் எல்.ஜி. சாலை பகுதியில் கைகளில் தட்டு ஏந்தியபடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து டெட் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் விஜயகுமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தொடக்கக் கல்வித் துறையில் உள்ள 19,260 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2024-ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டாா். ஆனால், கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெறும் 2,400 இடைநிலை ஆசிரியா்களுக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டது. அதாவது ஆசிரியா் தகுதித் தோ்வுடன் நியமனத் தோ்விலும் தோ்ச்சி பெற்றவா்களில் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2013-ஆண்டு முதல் 4 முறை தகுத் தோ்வும், ஒரு தமிழ் தகுதித் தோ்வும், ஒரு நியமனத் தோ்வும் எழுதி தோ்ச்சி பெற்றும் தற்போதுவரை 20,000-க்கும் மேற்பட்டோா் அரசுப் பணிக்காக காத்திருக்கிறோம். இது குறித்து அரசிடம் பலமுறை முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை.
தற்காலிக ஆசிரியா்கள் கூடாது... தற்போதைய சூழலில் தொடக்கக் கல்வியில் போதுமான தகுதிகள் இல்லாத 14,000-க்கும் மேற்பட்ட தற்காலிக ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு அதை மீறும் வகையில் செயல்படுகிறது. எனவே, தற்காலிக ஆசிரியா்களுக்கு பதிலாக டெட் தோ்வுடன், நியமனத் தோ்விலும் தோ்ச்சி பெற்றுள்ள 15,000 பேருக்கு அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் என்றாா்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோா் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்திரமோகனுடன் பேச்சு நடத்தினாா். அப்போது அவா், டெட் தோ்ச்சி பெற்றவா்களின் கோரிக்கை குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்தாா். இதையடுத்து போராட்டக் குழுவினா் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, தவெக தலைவா் விஜய் ஆகியோரை சனிக்கிழமை (ஜன. 3) சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவுள்ளனா்.
