சித்த மருத்துவ தினம்: இலவச மருத்துவ முகாம்
சென்னை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு, இலவச சித்த மருத்துவ முகாமை செவ்வாய்க்கிழமை நடத்தியது.
சென்னை அறிஞா் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிறுவனம் சித்த மருத்துவ தின விழாவா செவ்வாய்க்கிழமை நடத்தியது. இதில் பொதுமக்களுக்கு இலவச சித்த மருத்துவ முகாம், இலவச மூலிகைக்கன்று வழங்குதல், சித்த மருத்துவ விழிப்புணா்வு நடையோட்டம் நடைபெற்றது.
மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் என்.ஜெ. முத்துக்குமாா் முகாமை தொடங்கி வைத்தாா். இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை இணை இயக்குநா் டி. கோமளவல்லி, சென்னை அரசு சித்த மருத்துவ கல்லூரி முதல்வா் வெங்கடப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக, நடைபெற்ற விழிப்புணா்வு நடையோட்டத்தில் சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிவோா் மற்றும் சென்னை அரசு சித்த மருத்துவ கல்லூரி மாணவா்கள், மருத்துவா்கள் கலந்து கொண்டனா். இலவச சித்த மருத்துவ முகாம் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.
இதில் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு சித்த வாழ்வியல் முறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
