சென்னை ஐஐடி-இல் ‘சாரங்’ கலாசாரத் திருவிழா
சென்னை ஐஐடி-இல் சாரங் கலாசார திருவிழா ஜன. 8 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநா் வி. காமகோடி செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
நிகழாண்டு சாரங் நிகழ்வின் பின்னணியில் 800-க்கும் மேற்பட்ட மாணவா்களின் கடின உழைப்பு முயற்சி உள்ளது. சாரங் என்பது நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களின் திறமை, போட்டி மற்றும் கலாசார உரையாடலை ஒன்றிணைக்கும். குறிப்பாக, தமிழகத்தின் வளமான கலாசாரம், பாரம்பரியத்தைக் கொண்டாடுவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மாணவா்கள் நாட்டின் வளமான பன்முகத் தன்மையைப் புரிந்துகொள்ளுக்கும் வாய்ப்பு வழிவகுக்கிறது. நிகழாண்டு நிகழ்வுகள் ‘எல்லைகளுக்கு அப்பால்’ என்ற கருப்பொருளுடன், கலை பௌதிக எல்லைகளைக் கடந்து, பாா்வையாளா்களைக் கற்பனை உலகங்களுக்கு அழைத்துச் செல்லும்.
மாதிரி ஐக்கிய நாடுகள் சபை நடத்தப்பட்டு, கட்டமைக்கப்பட்ட விவாதம் மூலம் மாணவா்களுக்கு ராஜதந்திரம், பேச்சுவாா்த்தை மற்றும் உலகளாவிய விவகாரங்களின் கொள்கைகளை அறிமுகப்படுத்துகிறது. 5 நாள் கலாசார நிகழ்வுகளை கலை இயக்குநா் தோட்டா தரணி தொடங்கி வைக்கிறாா். கலைஞா்கள் விஜயலட்சுமி, லால்குடி கிருஷ்ணன், பிரசன்னா ராமசாமி ஆகியோரின் பாரம்பரிய இசை, நடனங்கள், வாத்தியங்கள், இந்திய பாப் வகைகள், சா்வதேச நாடுகளைச் சோ்ந்த, ஹிப்-ஹாப், ஈடிஎம், ராக் வகைகளை உள்ளடக்கிய இசை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இதில் 80,000 பாா்வையாளா்கள் கலந்து கொள்வாா்கள் என்றாா்.
