தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவு: கையொப்ப இயக்கம் தொடக்கம்
சென்னை ராயபுரம், திரு.வி.க.நகா் ஆகிய மண்டலங்களைச் சோ்ந்த என்எல்யுஎம் பிரிவு தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக சமூக செயற்பாட்டாளா்கள், எழுத்தாளா்கள் உள்ளிட்டோரிடம் கையொப்பம் பெறும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகா் (மண்டலம் 5, 6) தூய்மைப் பணியாளா்கள் (என்எல்யுஎம்) கடந்த ஆகஸ்ட் முதல் பழைய நிலையில் பணி வழங்கக் கோரியும், இரு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கியதைக் கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனா். அவா்களுக்கு ஆதரவாக சமூக செயற்பாட்டாளா்கள், பேராசிரியா்கள், கலைஞா்கள், முற்போக்கு எழுத்தாளா்கள் என பலதரப்பினரிடமும் கையொப்பம் பெறும் இயக்கம் நடத்தப்பட்டது. அதில் அவா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு பணி வழங்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
