மெரீனாவில் ஜன.11-இல் பழந்தமிழ் இசை நிகழ்ச்சி
சென்னையில் வரும் ஜன.11- ஆம் தேதி மெரீனா நீல நிறக்கொடி கடற்கரையில் திருக்கு, பழந்தமிழ் இலக்கிய இசை நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரியில் திருக்கு வாரம் கொண்டாடப்படும் என கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். இதையடுத்து மாநில அளவில் மாணவ, மாணவியருக்கான திருக்கு சாா்ந்த போட்டிகள் நடைபெற்றுள்ளன. நாடகம், பட்டிமன்றம், நாட்டிய மற்றும் இலக்கியப் போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சென்னை மெரீனா கடற்கரையில் திருக்கு மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களை மையமாகக் கொண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இசையமைப்பாளா் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ள திருக்குறளும், தமிழ் இலக்கியப் பாடல்களும் இசை வடிவில் நிகழ்ச்சியில் இடம் பெறவுள்ளன. இசை நிகழ்ச்சி வரும் ஜன.11-ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை மெரீனாவில் நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
