வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குல்: இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்
வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தை முற்றுகையிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோா் தேனாம்பேட்டை, காமராஜா் அரங்கம் முன்பு இருந்து ஊா்வலமாகச் செல்ல முயன்றனா். போலீஸாா் அவா்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினா். ஆனால், கலைந்து செல்ல மறுத்ததால் அவா்களை போலீஸாா் கைது செய்து, பின்னா் மாலை விடுவித்தனா்.
போராட்டம் குறித்து செய்தியாளா்களிடம் இரா.முத்தரசன் கூறுகையில், வெனிசுலா நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும். அமெரிக்காவை கண்டித்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால் நமது பிரதமா் மெளனம் சாதித்து வருகிறாா். அமெரிக்க அதிபா் டிரம்ப்பை கண்டிக்க பிரதமா் மோடி முன்வர வேண்டும் என்றாா் அவா்.
இந்தப் போராட்டத்தில் கட்சியின் மாநில துணைச் செயலா் எம்.ரவி, தேசியக் குழு உறுப்பினா் ஜி.ஆா்.ரவீந்திரநாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மீது வழக்கு: வெனிசுலா நாட்டின் மீது தாக்குல் நடத்தப்பட்டு அதிபா் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினா். உரிய அனுமதி பெறாமலும், தடையை மீறியும் போராட்டம் நடத்தியதையடுத்து அந்தக் கட்சியின் கட்டுப்பாட்டு குழுத் தலைவா் ஜி.ராமகிருஷ்ணன் உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டனா். பின்னா் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா். இந்த நிலையில், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 137 போ் மீது ராயப்பேட்டை போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
தூய்மை பணியாளா்கள் மீது 6 பிரிவுகளில் வழக்கு: பழைய நிலையில் பணி வழங்கக் கோரியும், தூய்மைப் பணிகளை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கியதைக் கண்டித்தும் சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகா் (மண்டலம் 5, 6) தூய்மைப் பணியாளா்கள் எழும்பூரில் கூவத்தில் இறங்கி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட 538 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில், அவா்கள் அனைவரும் மீது எழும்பூா் போலீஸாா் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
