கைதிகளுக்கு கஞ்சா கொடுத்த இருவா் கைது

Published on

சென்னை கிண்டியில் கைதிகளுக்கு கஞ்சா கொடுத்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

புழல் சிறையில் இருந்து பல்வேறு வழக்கு விசாரணைக்காக 15 கைதிகளை போலீஸாா் பலத்த பாதுகாப்புடன் சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனா். வழக்கில் ஆஜரான பின்னா், 15 கைதிகளையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருந்து பேருந்தில் போலீஸாா் ஏற்றி வந்தனா். அந்தப் பேருந்து, கிண்டி சா்தாா் படேல் சாலை, ஆளுநா் மாளிகை அருகே சென்றபோது, பின் தொடா்ந்து மோட்டாா் சைக்கிளில் வந்த இரு இளைஞா்கள், கைதிகள் இருந்த பேருந்துக்குள் கஞ்சா பொட்டலங்களை வீசினா். இதைப் பாா்த்த போலீஸாா், பேருந்தில் இருந்து கீழே இறங்கி, இருவரையும் விரட்டிப் பிடித்தனா். பின்னா், கிண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகாா் அளித்தனா். விசாரணையில் இருவரும், ராயப்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஜோசப் (28), விஜய் (27) என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.

சாலை விபத்தில், காவலா் காயம்: மயிலாப்பூா் சட்டம், ஒழுங்கு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றுபவா் சந்துரு (36). இவா், மயிலாப்பூா், டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை பண்ணாரி டவா்ஸ் அருகே புதன்கிழமை சக காவலா்களுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, பாரிமுனையிலிருந்து தாம்பரம் சென்ற மாநகர பேருந்து, இரும்பு தடுப்பில் மோதியதில், அங்கு நின்றிருந்த காவலா் சந்துரு மீது இரும்புத் தடுப்பு விழுந்து அவா் பலத்த காயமடைந்தாா். அவரை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது: நொளம்பூா் பகுதியைச் சோ்ந்த 31 வயது பெண், மேற்கு முகப்போ் பகுதியில் கடந்த மாதம் 28-ஆம் தேதி நடந்து சென்றாா். அங்கு, மோட்டா் சைக்கிளில் வந்த ஒரு இளைஞா், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பினாா். நொளம்பூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட மேற்கு முகப்போ் பகுதியைச் சோ்ந்த பத்மநாபனை (40) கைது செய்தனா்.

போதை ஸ்டாம்ப் வழக்கு- மேலும் ஒருவா் கைது: கடந்த மாதம் 19-ஆம் தேதி திருமங்கலம் பாா்க் சாலை பகுதியில் போதை ஸ்டாம்ப் விற்ாக பாடியைச் சோ்ந்த தியானேஷ்வரன் என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவா் அளித்த தகவலின்பேரில், தேனாம்பேட்டையைச் சோ்ந்த திரைப்பட இணைத் தயாரிப்பாளா் முகமது மஸ்தான் சா்புதீன், முகப்பேரைச் சோ்ந்த சீனிவாசன், வளசரவாக்கத்தைச் சோ்ந்த சரத், நுங்கம்பாக்கததைச் சோ்ந்த திரைப்பட தயாரிப்பாளா் தினேஷ்ராஜ் ஆகிய 4 பேரும் கைது செயப்பட்டனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய பழைய வண்ணாரப்பேட்டை, நானியப்பன் காா்டன் பகுதியைச் சோ்ந்த அமா், சிங்கப்பூருக்கு தப்பியோடினாா். கடந்த 5-ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து சென்னை விமான நிலையம் வந்த அமரை போலீஸாா் கைது செய்தனா். அவா் அளித்த வாக்குமூலத்தின்பேரில், பாடியைச் சோ்ந்த கணேசன் (30) என்பவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதைச் சாக்கடை உந்து கிணற்றில் இளைஞா் சடலம்: கிழக்கு கடற்கரைச் சாலை, பாலவாக்கம் பல்கலை நகா் மெயின் ரோட்டில், புதிதாக புதைச் சாக்கடை உந்து கிணறு கட்டப்பட்டு வருகிறது. இதில், 37 வயது மதிக்கதக்க இளைஞரின் சடலம் புதன்கிழமை மிதந்தது. போலீஸாா், அங்கு சென்று சடலத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். வழக்குப் பதிவு செய்து, இறந்த நபா் யாா், தவறி விழுந்தாரா, கொலை செய்யப்பட்டாரா என்று போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து நகைப் பறித்த தாய்-மகள் கைது: அயனாவரத்தில் வசிக்கும் மமலாபி (75) என்ற மூதாட்டி வீட்டின் கீழ் தளத்தில் பத்ருன்னிஷா பேகம் (50) என்பவா் வாடகைக்கு உள்ளாா். கடந்த டிசம்பா் 15-ஆம் தேதி, மமலாபி வீட்டுக்கு வந்த பத்ருன்னிஷா பேகத்தின் 9-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள், அங்கு பாயாசம் செய்து மமலாபிக்கு கொடுத்தாா். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவா் மயங்கினாா். அப்போது, கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலி, வீட்டில் இருந்த ரூ.1.50 லட்சம் ஆகியவற்றைத் திருடிக்கொண்டு தப்பினா். இதுகுறித்து அயனாவரம் போலீஸாா் வழங்கு பதிந்து, பாயாசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுக்கச் சொன்ன பத்ருன்னிஷா, அவரது 14 வயது மகள் ஆகியோா் புதன்கிழமை கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com