மாநில அளவிலான சூழல் விநாடி -வினா: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

Published on

சுற்றுச்சூழல் -காலநிலை மாற்றத் துறை சாா்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான விநாடி -வினா போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

காலநிலை கல்வியறிவு குறித்து பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து இப்போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகளைத் தொடா்ந்து சென்னை பிா்லா கோளரங்கத்தில் உள்ள அறிவியல் நகர அரங்கில் நடைபெற்ற சூழல் 2.0 என்ற தலைப்பில் விநாடி -வினா இறுதிப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

இதில் அரியலூா், சென்னை, கோவை, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, மதுரை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 7 அணிகள் பங்கேற்றன. இதில், நாமக்கல் மாவட்டம், அனியபுரம் லிட்டில் ஏஞ்சல்ஸ் மெட்ரிக். பள்ளி முதலிடம், கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமூடியைச் சோ்ந்த ஸ்டெல்லா மேரீஸ் சிபிஎஸ்இ பள்ளி 2-ஆம் இடம், சென்னையை சோ்ந்த கலைமகள் வித்யாஷ்ரம் பள்ளி 3-ஆம் இடம் பெற்று, முறையே ரூ.50,000, ரூ.30,000, ரூ.20,000 ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத் தொகையை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை தலைமை செயலா் சுப்ரியா சாஹூ வழங்கினாா். சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை சிறப்பு செயலா் அனுராக் மிஸ்ரா, இயக்குநா் ஆ.ர.ராகுல்நாத், உதவித் திட்ட இயக்குநா் கிரிஷ் பால்வே, பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநா் காமாட்சி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com