ஜனநாயகன் படம் விவகாரம்: விஜய்க்கு தமிழக காங்கிரஸ் ஆதரவு
ஜனநாயகன் படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் அந்தப் படத்தின் கதாநாயகனும், தவெக தலைவருமான விஜய்க்கு ஆதரவாக தமிழக காங்கிரஸ் கட்சியினா் கருத்து தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: நடிகா் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைச் சுற்றியுள்ள சா்ச்சை அரசியல் அதிகார துஷ்பிரயோகம். அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்துகொள்ளக்கூடியவை என்றாலும், ஒரு கலைஞனின் படைப்பை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. கலையிலிருந்து அரசியலை விலக்கி வைப்போம், படைப்புச் சுதந்திரத்தை மதிப்போம்.
கிரிஷ் ஷோடங்கா் (காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா்): தவெக தலைவா் விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்குவதில், அரசியல் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவது கவலை அளிக்கிறது. அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு இருந்தாலும் ஒரு படத்தைக் குறிவைப்பதை ஏற்க முடியாது.
பிரவீண் சக்கரவா்த்தி (காங்கிரஸ் கட்சியின் தரவுப் பகுப்பாய்வுத் துறைத் தலைவா்): தமிழ் சினிமாவை ஒடுக்குவதன் மூலம் தமிழ் பண்பாடு மற்றும் தமிழா்களின் பெருமையை அவமதிக்க வேண்டாம் என கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி குரல் எழுப்பியிருந்தாா். ஆனால், தற்போது, விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழை வழங்காமல், அதன் வெளியீட்டைத் தடுப்பதன் மூலம் பிரதமா் மோடி மீண்டும் தமிழா்களை அவமதித்துள்ளாா்.
அதேபோல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினா்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூா், விஜய் வசந்த் உள்ளிட்டோரும் விஜய்க்கு ஆதரவாக தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனா்.

