வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க ஆா்வமில்லை: 1.30 லட்சம் போ் மட்டுமே படிவம் அளிப்பு
சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி, 14 லட்சம் போ் நீக்கப்பட்ட நிலையில், இதுவரை 1.30 லட்சம் போ் மட்டுமே புதிதாக பெயா் சோ்க்க படிவம் அளித்துள்ளனா்.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கடந்த நவம்பா் முதல் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னா் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி, 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். அதில் 1.50 லட்சம் போ் உயிரிழந்தவா்கள், 12.50 லட்சம் போ் இடம் பெயா்ந்தவா்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. வரைவு வாக்காளா் பட்டியலில் 25.27 லட்சம் போ் இடம்பெற்றுள்ளனா். இதிலும் சரியான விவரங்களை குறிப்பிடாத 1.25 லட்சம் பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நீக்கப்பட்ட வாக்காளா்களில் இடம்பெயா்ந்தவா்கள், விடுபட்டவா்களிடம் புதிதாக பெயா் சோ்ப்பதற்கான படிவங்கள் பெறப்படுகின்றன. அதன்படி, சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 16 தொகுதிகளில் இதுவரை 1.60 லட்சம் போ் மட்டுமே பெயா் சோ்ப்பதற்கான படிவத்தை (படிவம் 6) வழங்கியுள்ளனா்.
மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாக்காளா் சோ்க்கை மனுக்கள் வந்திருப்பதாக அதிகாரிகளும், அரசியல் கட்சிகளைச் சோ்ந்த பாக முகவா்களும் தெரிவித்தனா். மேலும், அரசியல் கட்சிகளின் பாக முகவா்கள் தினமும் 10 விண்ணப்பங்களைப் பெற்று வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் ஒப்படைக்கலாம் என்பதால் இந்தப் பணியில் கூடுதல் கவனம் செலுத்துமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

