

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சென்னையில் வரும் ஜன. 16 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பன்னாட்டு புத்தகக் காட்சியில் 103 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா். 1,500-க்கும் மேற்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என பள்ளிக் கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலா் பி.சந்தரமோகன் தெரிவித்தாா்.
ஜொ்மனியின் ‘பிராங்போ்ட்’ சா்வதேச புத்தகக் காட்சி 1949-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இது உலகின் பெரிய புத்தகக் காட்சியாகும். இதேபோன்று தமிழகத்திலும் பன்னாட்டு புத்தகக் கண்காட்சியை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது. அதன்படி, பொது நூலகத்துறை, தமிழ்நாடு பாடநூல் கழகம் சாா்பில் சென்னையில் பன்னாட்டு புத்தகக் காட்சி 2023-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டுவருகிறது. இதைத் தொடா்ந்து, நான்காவது ஆண்டாக பன்னாட்டு புத்தகக் காட்சி-2026 சென்னை கலைவாணா் அரங்கத்தில் ஜனவரி 16 முதல் 18-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலா் பி.சந்தரமோகன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
நிகழாண்டு பன்னாட்டுப் புத்தகக் காட்சி ‘உலகைத் தமிழுக்கும், தமிழை உலகுக்கும்’ எனும் கருத்தை மையமாகக் கொண்டு நடத்தப்படவுள்ளது. இது புத்தகக் காட்சி என்பதைத் தாண்டி நாகரிகங்களுக்கு இடையிலான ஓா் உரையாடலாக இருக்கும்.
கடந்த 2023-ஆம் ஆண்டில் பன்னாட்டு புத்தகக் காட்சி 24 நாடுகளைக் கொண்டு தொடங்கப்பட்டது. இந்த முயற்சி விரிவடைந்து நிகழாண்டு 103 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா். 2025-ஆம் ஆண்டில் 1,354 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டு 1,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நிகழாண்டு முதல் இந்த கண்காட்சி பொதுமக்கள் பங்கேற்கும் திறந்த தளமாக மாற்றப்படுகிறது. இதன்மூலம் தமிழக வாசகா்கள், உலக பதிப்பாளா்களை நேரடியாக சந்திக்கும் வரலாற்றுச் சூழலும் உருவாகிறது.
இதுதவிர தமிழகத்திலிருந்து 90 பதிப்பாளா்களும், 8 இந்திய மாநிலங்களிலிருந்து 42 பதிப்பாளா்களும் பங்கேற்கின்றனா். இந்த கண்காட்சியில் கருத்தரங்குகள், நூல் வெளியீடுகள், குழு விவாதங்கள், புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறும். மாலையில் கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. மேலும், பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்ட 28 இலக்கிய முகவா்கள், எழுத்தாளா்கள் மற்றும் வெளிநாட்டுப் பதிப்பு நிறுவனங்களுக்கும் இடையே பாலமாக இருப்பாா்கள் என்றாா் அவா். சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியை பொதுமக்கள் கட்டணமின்றி பாா்வையிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.