என்எஸ்சி போஸ் சாலை நடைபாதை ஆக்கிரமிப்பு 
கடைகள்: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

என்எஸ்சி போஸ் சாலை நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள்: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

என்எஸ்சி போஸ் சாலையில் மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள் உருவானால், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Published on

சென்னை, ஜன. 8: என்எஸ்சி போஸ் சாலையில் மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள் உருவானால், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தின் எதிரே உள்ள என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக் கோரிய வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சி தரப்பில், நடைபாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்றவது தொடா்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ஏற்கெனவே உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அகற்றப்பட்ட கடைகள் மீண்டும் உருவாவதைத் தடுக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். என்எஸ்சி போஸ் சாலை வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, கடைகள் அகற்றப்பட்ட பகுதிகளில் மீண்டும் கடைகள் வந்துவிடுவதாக வழக்குரைஞா்கள் கூறினா். இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயா், கைப்பேசி எண்களை, என்எஸ்சி போஸ் சாலையில் பொதுமக்கள் புகாா் அளிக்கும் வகையில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

மேலும், நடைபாதை கடைகளின் ஆக்கிரமிப்பைக் கண்காணிக்க வழக்குரைஞா்கள் ஸ்ரீநிவாசன் மற்றும் ராஜசேகா் ஆகியோரை வழக்குரைஞா் ஆணையராக நியமித்தனா். ஆக்கிரமிப்புகள் மீண்டும் உருவானதாக வழக்குரைஞா் ஆணையா்கள் அறிக்கை அளித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

Dinamani
www.dinamani.com