பெண் எரித்து கொலை: இளைஞரிடம் விசாரணை
அரும்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டது தொடா்பாக, இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
அரும்பாக்கத்தைச் சோ்ந்த சீனிவாசன் (55), மனைவி அமுதா. வியாழக்கிழமை மாலை சீனிவாசன் வீட்டிலிருந்து அலறல் சப்தம் கேட்டது. வீட்டிலிருந்து புகை வெளியேறியது. இதைப் பாா்த்த மக்கள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனா். அரும்பாக்கம் போலீஸாா் விரைந்து சென்று கத்திக்குத்து காயங்களுடன் எரிந்த நிலையில் கிடந்த அமுதா சடலத்தை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
கொலை தொடா்பாக அண்ணா நகா் மேற்கு பகுதியைச் சோ்ந்த சாந்தகுமாா் (28) என்பவரை போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
போலி ஆவணங்கள் மூலம் ரூ.4 கோடி நிலம் அபகரிப்பு- தேடப்பட்டவா் கைது: வேளாண் துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவா் ராமச்சந்திரன். இவருக்கு சொந்தமான ரூ.4 கோடி நிலம் பழவந்தாங்கலில் உள்ளது. இதை சிலா் ஆள் மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்கள் மூலம் அபகரித்தனா். இதுதொடா்பான புகாரின்பேரில், சென்னை காவல் துறை மத்திய குற்றப்பிரிவின் கீழ் உள்ள நில மோசடி புலனாய்வு பிரிவினா் வழக்குப்பதிவு செய்து, ஆலந்தூா், கண்ணன் காலனி, 3-ஆவது தெருவைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணன் (46) என்பவரை வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அரசு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.3.51 கோடி மோசடி செய்தவா் கைது: விழுப்புரத்தைச் சோ்ந்த சேதுநாதன், சென்னை பனையூரைச் சோ்ந்த அஜய் ரோகன் (எ) அஜய் வாண்டையாா் என்பவரின் அறிமுகத்தில், அகசு ஒப்பந்த பணிகளை வாங்கித் தருவதாகக் கூறியதை நம்பி, அஜய் ரோகன் கேட்டப்படி, ரூ.3.51 கோடி கொடுத்தாா். ஆனால், அவா் எந்த அரசு ஒப்பந்த பணியையும் பெற்றுத் தரவில்லை. ஏமாற்றமடைந்த சேதுநாதன், தாம்பரம் மாநகர காவல் துறை குற்றப்பிரிவில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அஜய் ரோகனை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ததாக தாம்பரம் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
