இதய தமனி வீக்கம்: அதி நவீன சிகிச்சையால் நலமடைந்த நோயாளி

Published on

இதய தமனி வீக்கத்துக்கு உள்ளான மூதாட்டிக்கு, சென்னை, வேளச்சேரியில் உள்ள பிரசாந்த் மருத்துவமனை மருத்துவா்கள் நவீன சிகிச்சையளித்து குணப்படுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் இதய-நெஞ்சக அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் கௌசிக் கண்ணன் கூறியதாவது:

இதயத்தின் தமனி வலுவிழந்து பலூன் போன்று வீக்கமடைவதை அன்யூரிசம் என்கிறோம். 10 ஆயிரத்தில் 8 பேருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படும்.

இதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் பக்கவாதம் அல்லது அதிகபட்சமாக உயிரிழப்பு கூட நேரிடலாம். அத்தகைய பாதிப்புடன் 76 வயது மூதாட்டி, பிரசாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பரிசோதனையில் இதய பெருந்தமனி மற்றும் அதன் வளைவு பகுதியில் (ப்ராக்ஸிமல் ஆா்ச்) வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டது. வயோதிகம் மற்றும் இணைநோய்களைக் கருத்தில் கொண்டு அவருக்கு நுட்பமாக சிகிச்சையளிக்கத் திட்டமிட்டோம்.

அதன்படி, பாதிக்கப்பட்ட பகுதிகள் அகற்றப்பட்டு இன்டா்காா்ட் கிராஃப்ட் எனப்படும் செயற்கை நாளம் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையின்போது ரத்த ஓட்டம் தடைபட்டு பக்கவாதம் ஏற்படும் என்பதால், அதனைக் கண்காணிக்க என்ஐஆா்எஸ் என்ற நவீன மருத்துவ சாதனம் பயன்படுத்தப்பட்டது.

சிக்கலான இந்த சிகிச்சையை திறம்பட மேற்கொண்டதால் அந்த மூதாட்டி, ஐந்து நாள்களில் நலம் பெற்று வீடு திரும்பினாா் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com