ரூ.4.58 கோடியில் கன்னிமாரா நூலகம் புதுப்பிப்பு: துணை முதல்வா் உதயநிதி திறந்து வைத்தாா்
சென்னை எழும்பூரில் ரூ.4.58 கோடியில் புதுப்பிக்கப்பட்ட கன்னிமாரா நூலகத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
சென்னை கன்னிமாரா பொது நூலகம் கடந்த 1890-ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்த பாபி ராபா்ட் பாரன் கன்னிமாராவால் அடிக்கல் நாட்டப்பட்டு 1896 டிச.5- ஆம் தேதி தொடங்கப்பட்டது. 130-ஆவது ஆண்டில் தடம் பதித்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
இந்த நூலகத்தின் கட்டடக்கலை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. இங்கு 1553 -ஆம் ஆண்டு வெளியான நூல் உள்பட மிகப் பழைமையான நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
1954- ஆம் ஆண்டு இந்திய அரசு, நூல்கள் மற்றும் நாளிதழ்கள் விநியோகச் சட்டத்தின்படி இந்தியாவிலுள்ள 4 தேசிய நூலகங்களான கொல்கத்தா, தில்லி, மும்பை மற்றும் சென்னை கன்னிமாரா பொது நூலகங்களுக்கு நூல் பதிப்பாளா்கள், நாளிதழ்கள் பதிப்பாளா்கள் அனைவரும் தங்கள் வெளியீடுகளை இலவசமாக ஒரு பிரதி அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த நூலகத்தில் 9.5 லட்சம் நூல்களும், 1.50 லட்சம் உறுப்பினா்களும் உள்ளனா். நாளொன்றுக்ககு சராசரியாக 500-க்கும் மேற்பட்ட போட்டி தோ்வு மாணவா்கள் உள்பட 1,000-க்கும் மேற்பட்ட வாசகா்கள் வருகை தருகின்றனா்.
இந்த நிலையில் கன்னிமாரா நூலகத்தில் உள்ள சிறுவா் நூலகம், அறிவியல் மையம், குடிமையியல் பிரிவு, மின்தூக்கி வசதி , சொந்த நூல் படிக்கும் பிரிவு, மாநாட்டுக் கூடம் ஆகியவை ரூ.4.58 கோடியில் நவீனப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இதை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்து பாா்வையிட்டாா்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, அன்பில் மகேஸ், மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினா் இ.பரந்தாமன், பள்ளிக்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலா் பி.சந்தரமோகன், பொது நூலகத் துறை இயக்குநா் ச.ஜெயந்தி, சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழுத் தலைவா் மனுஷ்ய புத்திரன், பள்ளிக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

