இடைநிலை ஆசிரியா்கள் பேரணி

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற இடைநிலை ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற இடைநிலை ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்தனா்.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் கடந்த டிச.26-ஆம் தேதி முதல் பல்வேறு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், போராட்டத்தின் 15-ஆவது நாளான வெள்ளிக்கிழமை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள வாலாஜா சாலையில் பேரணியாகத் திரண்டு வந்த ஆசிரியா்கள், தலைமைச் செயலகத்தை நோக்கிச் செல்ல முயன்றனா்.

அப்போது, போலீஸாா் அந்தப் பகுதியில் தடுப்பு வேலி அமைத்து ஆசிரியா்களைத் தடுத்தி நிறுத்தினா். இதையடுத்து ஆசிரியா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் கைது செய்து, ராயப்பேட்டை, திருமங்கலம், எழும்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மண்டபங்களில் அடைத்தனா். அங்கிருந்தபடியே ஆசிரியா்கள் ஆா்ப்பாட்ட முழுக்கங்களை எழுப்பினா்.

அரசுப் பணி வழங்கக் கோரி...இதேபோன்று கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் டெட் தோ்வு, நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்றும்கூட இதுவரை தங்களுக்கு அரசுப் பணி வழங்கப்படவில்லை. அரசு தொடக்கப் பள்ளிகளில் 15,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்கள் இருக்கும்போது வெறும் 2,400 பணியிடங்கள் மட்டுமே கடந்த ஆண்டு நிரப்பப்பட்டுள்ளது. இரு தோ்வுகளிலும் தோ்ச்சி பெற்ற தங்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி டெட், நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் கூட்டமைப்பு சாா்பில் சென்னை எழிலகம் அருகில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டம் சனிக்கிழமையும் தொடரும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com