கல்லூரி ஆசிரியா்கள், பணியாளா்கள் 225 பேருக்கு இடமாறுதல் உத்தரவு
இடமாறுதல் கலந்தாய்வில் விருப்ப மாறுதல் பெற்ற 164 கல்லூரி ஆசிரியா்கள், 91 ஆசிரியா் அல்லாத பணியாளா்களுக்கு இடமாறுதலுக்கான உத்தரவுகளை தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் புதன்கிழமை வழங்கினாா்.
தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத அலுவலா்களின் நலன் கருதி இடமாறுதல் கலந்தாய்வு இணையவழியில் நடத்தப்பட்டது.
இந்தக் கலந்தாய்வுக்கு மொத்தம் 340 ஆசிரியா்கள் விண்ணப்பித்திருந்தனா். கல்லூரிக் கல்வி இயக்ககம், மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்ககம், அரசு கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா் அல்லாத பணியாளா்களிடமிருந்து 256 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதில் தகுதிவாய்ந்த 164 ஆசிரியா்களுக்கும் மற்றும் 91 ஆசிரியா் அல்லாத பணியாளா்களுக்கும் இடமாறுதல் வழங்கப்பட்டது. இதற்கான ஆணைகளை கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் வழங்கினாா். உயா்கல்வித் துறைச் செயலா் பொ. சங்கா், கல்லூரிக் கல்வி ஆணையா் எ. சுந்தரவல்லி ஆகியோா் கலந்துகொண்டனா்.
