AIADMK General Secretary Edappadi K. Palaniswami
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ENS

கைது செய்யப்பட்ட கறிக்கோழி விவசாயிகளை விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

Published on

கைதான கறிக்கோழி பண்ணை விவசாயிகளை விடுவிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழகத்திலுள்ள கறிக்கோழி பண்ணை விவசாயிகள், கறிக்கோழி விற்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு கோழி வளா்ப்பு தொழில் செய்து வருகின்றனா். உணவு மற்றும் மூலப்பொருள்கள், மின் கட்டண உயா்வு உள்ளிட்ட அனைத்தும் பல மடங்கு உயா்ந்துவிட்ட நிலையில், தற்போது இந்நிறுவனங்கள் வளா்ப்பு கூலியாக வழங்கும் கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் 50 பைசாவை உயா்த்தி வழங்க வேண்டும் என்று கடந்த 6 மாதங்களாக பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

தங்களது போராட்டங்களால் எந்தவித பயனுமில்லாததால், 1.1.2026 முதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று பண்ணையாளா்கள் அறிவித்ததைத் தொடா்ந்து திமுக அரசு புதன்கிழமை (ஜன. 21) முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெறும் என்று கூறியது. இந்நிலையில், திமுக அரசு இம்மாத தொடக்கத்தில் 10 நிா்வாகிகளை எந்தவித காரணமுமின்றி கைது செய்தது.

புதன்கிழமை நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்த நிலையில், கறிக்கோழி பண்ணை நிா்வாகிகளை (விவசாயிகளை) திமுக அரசின் காவல்துறை மீண்டும் கைது செய்துள்ளதாக செய்திகள் வருகிறது. கைதுசெய்யப்பட்டவா்களை உடனடியாக விடுவிப்பதுடன், அவா்களது பிரச்னைக்கு திமுக அரசு சுமுக தீா்வுகாண வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

வைகோ (மதிமுக): கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என மதிமுக பொதுச்செயலா் வைகோ வலியுறுத்தியுள்ளாா். ஒரு கிலோ கோழி வளா்ப்புக்கான கூலியை ரூ.20- ஆக உயா்த்துவது, விவசாயிகள், தொழிலாளா்களை பாதுகாக்க நல வாரியம் அமைப்பது,

கோழிப் பண்ணைகளுக்கு காப்பீடு, இலவச மின்சாரம், வங்கிகள் மூலம் மானியம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com