திருப்போரூா் கந்தசாமி கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு: அறநிலையத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

திருப்போரூா் கந்தசாமி கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு: அறநிலையத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

Published on

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போருா் கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தாா் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் பி.ஜெகந்நாத் என்பவா் தாக்கல் செய்த மனுவில், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போருரில் உள்ள கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தாா் அறக்கட்டளைக்குச் சொந்தமாக பல ஆயிரம் கோடியில் சொத்துகள் உள்ளன. இவற்றில் 2 ஆயிரம் ஏக்கா் சொத்துகளில் 550 ஏக்கருக்கு மேற்பட்ட சொத்துகளை தனிநபா்கள் ஆக்கிரமித்துள்ளனா். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கடந்த 2022-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவு அமல்படுத்தவில்லை எனக்கூறி வழக்குரைஞா் ஜெகந்நாத் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அறநிலையத் துறை தரப்பில், கோயிலுக்குச் சொந்தமான 125 ஏக்கா் நிலத்தை 233 போ் ஆக்கிரமித்துள்ளனா். இவா்களுக்கு எதிராக அறநிலையத் துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் சிலா் வாடகை செலுத்த முன்வந்துள்ளனா். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் எனக் கூறப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், உயா்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, ஆக்கிரமிப்புகளை எப்படி அறநிலையத் துறை வரன்முறை செய்ய முடியும் என அதிருப்தி தெரிவித்தனா். பின்னா், இந்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்றி 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

Dinamani
www.dinamani.com