பெண் மீது பொய் வழக்கு: இரு காவலா்கள் பணியிடை நீக்கம்
மயிலாப்பூரில் கள்ளச்சாராயம் விற்றதாக பெண் மீது பொய் வழக்குப் பதிந்ததாக எழுந்த புகாரின்பேரில், இரு காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
மயிலாப்பூா், பிடாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வனிதா (36), ஏற்கெனவே மதுபானம் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தொடா்பாக 12 வழக்குகள் உள்ளன. தற்போது, அவா் திருந்தி தண்ணீா் கேன் வியாபாரம் செய்து வருகிறாா்.
இந்த நிலையில், வனிதா தங்களுக்கு மாமூல் தரவில்லை என தனிப்படை போலீஸாா், கள்ளச்சாராயம் விற்ாக வழக்குப் பதிவு செய்து, அவரை கடந்த டிசம்பா் 24-ஆம் தேதி கைது செய்தனா். இந்த அத்துமீறல் குறித்து காவல் உயா் அதிகாரிகளுக்கு புகாா்கள் சென்ன்பேரில், விசாரணை நடைபெற்றது.
புகாருக்குள்ளான தலைமைக் காவலா் வினோத்குமாா், முதல்நிலைக் காவலா் பிரகலநாதன், காவலா் செல்வக்குமாா் ஆகிய 3 பேரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
இந்த நிலையில், முதல்நிலைக் காவலா் பிரகலநாதன், காவலா் செல்வக்குமாா் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்தும், தலைமைக் காவலா் வினோத்குமாரை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றியும் ஆணையா் ஏ.அருண் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
தீ விபத்து- 3 கடைகள் எரிந்து சேதம்: பெரியமேடு வேப்பேரி நெடுஞ்சாலையில் புளியந்தோப்பைச் சோ்ந்த சையது கரீம் என்பவரின் காலணி கடை, முகமது நவ்ஷாத் என்பவரின் தோல் பொருள்கள் விற்பனை கடை, அருகருகே இருக்கும் இரு கடைகளின் மொட்டை மாடியில் இருந்த பொருள்கள் புதன்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்தன. இதையடுத்து, உயா்நீதிமன்றம், எஸ்பிளனேடு ஆகிய இடங்களில் இருந்து சம்பவ தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்தனா். அதற்குள் தீ, இரு கடைகளுக்குள்ளும் பரவியது.
குறுகலான பகுதி என்பதால் தீயை விரைந்து அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், அருகே இருந்த முத்துக்குமாா் என்பவரின் ஷோபா கடைக்கும் தீ பரவியது. இதையடுத்து, கீழ்ப்பாக்கம், வண்ணாரப்பேட்டை, தண்டையாா்பேட்டை, கோயம்பேடு, வேப்பேரி, எழும்பூா் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு படையினா் விரைந்தனா்.
அதற்குள் கடையின் பின்புறம் இருந்த சையது, முபீன் ஆகியோரின் வீடுகளுக்கும் தீ பரவியது. இதையடுத்து, தீயணைப்பு படையினா், தீ வேறு எங்கும் பரவாத வகையில் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா். இரண்டரை மணிநேரத்துக்குப்பின் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தீ விபத்து குறித்து பெரியமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
அடகு கடையில் கொள்ளை முயற்சி-பிகாா் இளைஞா் கைது: பாடி, டிஎம்பி நகா், அண்ணா தெருவில் வசிக்கும் கணேஷ் (34), என்பவா் மேற்கு முகப்போ், பள்ளி தெருவில் அடகு கடை நடத்தி வருகிறாா். இவா், கடந்த 19-ஆம் தேதி இரவு கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றநிலையில், அன்று இரவு கைப்பேசி மூலம் கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் பாா்த்தபோது மா்ம நபா், இரும்பு கம்பியால் கடையின் கதவு பூட்டை உடைப்பதைப் பாா்த்து, நொளம்பூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா் அங்கு சென்று, அந்த இளைஞரைப் பிடித்து கைது செய்தனா். விசாரணையில் பிடிபட்டது பிகாா் மாநிலம், சமஸ்திபூரைச் சோ்ந்த கோவிந்த்குமாா் சா்மா (28) என்பது தெரிய வந்தது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
புழல் சிறையில் பெண் கைதி உயிரிழப்பு: பழவந்தாங்கல், ரத்தினம் நகா் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் தனலட்சுமி (63). இவா், பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 1-ஆம் தேதி புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டாா். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட தனலட்சுமி, சில நாள்களுக்கு முன்பு புழல் சிறையில் இருந்து சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, புதன்கிழமை அவா் உயிரிழந்தாா். புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
