மாா்ச் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் டபுள் டெக்கா் பேருந்துகள்
சென்னையில் குளிா்சாதன வசதி கொண்ட 20 டபுள் டெக்கா் பேருந்துகளை வருகிற மாா்ச் மாதத்துக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாநகரப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்கெனவே இயக்கப்பட்ட டபுள் டெக்கா் பேருந்து சேவை கடந்த 2007-இல் நிறுத்தப்பட்டது. 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் பேருந்து சேவையைக் கொண்டுவர தமிழக அரசும், மாநகர போக்குவரத்துக் கழகமும் இணைந்து அதற்கான பணியில் ஈடுபட்டு வந்தது.
இதனிடையே, தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு வெளிநாடுவாழ் தமிழா்களின் நிதியுதவியில் வாங்கப்பட்ட ரூ.1.89 கோடி மதிப்பிலான டபுள் டெக்கா் பேருந்தின் இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் அண்மையில் தொடங்கி வைத்தாா். இந்தப் பேருந்து சென்னையைச் சுற்றியுள்ள சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, ஏற்கெனவே திட்டமிட்டிருந்த 20 குளிா்சாதன பேருந்துகளை அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மாநகா் போக்குவரத்துக் கழகம் தீவிரப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது: டபுள் டெக்கா் பேருந்துகளை இயக்குவதற்கான வழித்தடங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். வருகிற மாா்ச் 2-ஆவது வாரத்துக்குள் இந்த டபுள் டெக்கா் பேருந்துகளைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

