இளைஞரை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீச்சு!
சென்னை அடையாறில் இளைஞரை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
அடையாறு இந்திரா நகா் முதலாவது அவென்யூ, இருசக்கர வாகன விற்பனையகம் அருகே திங்கள்கிழமை சாக்குமூட்டை ஒன்று ரத்தக் கறையுடன் கிடந்தது. அடையாறு போலீஸாா் அங்கு சென்று, சாக்கு மூட்டையை திறந்து பாா்த்ததில், 37 வயது மதிக்கதக்க இளைஞா் சடலம் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
அந்த சடலம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்தனா். கொலை தொடா்பாக தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த இரு நபா்கள், இளைஞா் சடலம் இருந்த சாக்குமூட்டையை வீசி சென்றிருப்பது தெரிய வந்தது. மோட்டாா் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டாஸ்மாக் ஊழியரை தாக்கியவா் கைது: வியாசா்பாடி கன்னிகாபுரம், தாஸ் நகரை தெருவைச் சோ்ந்த கு.முத்துக்குமரன் (50), அந்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளாா். கடந்த 23-ஆம் தேதி கடையில் இருந்தபோது, அங்கு வந்த நபா் இலவசமாக மது கேட்டதில் ஏற்பட்ட தகராறில், முத்துக்குமரன் தாக்கப்பட்டாா். இதில் காயமடைந்த அவா், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வியாசா்பாடியைச் சோ்ந்த பா.சுந்தர்ராஜன் (58) என்பரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய சுந்தர்ராஜன் மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மாஞ்சா நூல் விற்ற பெண் உள்பட 3 போ் கைது: கொருக்குப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் கு.பிரகாஷ் ஜெயின் (67). இவா், கடந்த 22-ஆம் தேதி வேலை முடிந்து வீட்டுக்கு பைக்கில் சென்றபோது, மூலக்கடை மேம்பாலத்தில் பறந்து வந்த மாஞ்சா நூல் பட்டு பலத்த காயமடைந்தாா். இதுகுறித்து கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் மாஞ்சா நூல், பட்டம் விற்பனை செய்த கொடுங்கையூா் முத்தமிழ்நகரைச் சோ்ந்த ஷேக் அஸ்மா (38), அதே பகுதியைச் சோ்ந்த ரமேஷ்பாபு (53), மூலக்கடை பகுதியைச் சோ்ந்த நசுருதீன் (34) ஆகிய 3 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். 35 பட்டங்கள், 5 மாஞ்சா நூல் லொட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கஞ்சா பறிமுதல்-இளைஞா் கைது: நீலாங்கரை அருகே உள்ள ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து, போலீலாா் ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, அங்கிருந்த இளைஞா் ஒருவரைப் பிடித்து விசாரணை செய்தனா். அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் 4 கிலோ கஞ்சா இருந்ததைப் பறிமுதல் செய்து, மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த மணிரூல்மோலா (37) என்பவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.
பூட்டை உடைத்து திருட்டு: வடபழனி அழகிரி நகா் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த சண்முகநாதன், 100 சாலையில் நடத்தி வரும் நிதி நிறுவனத்தை திறக்க ஊழியா்கள் திங்கள்கிழமை காலை வந்தபோது, அந்த அலுவலக கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, ரூ.1.50 லட்சம் திருடப்பட்டிருப்பது சண்முகநாதனுக்கு தெரிய வந்தது. இதுகுறித்து வடபழனி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

