வடசென்னை அனல்மின் நிலைய மூன்றாவது அலகில் வணிக ரீதியான மின் உற்பத்தி தொடக்கம்
சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தின் 3-ஆவது அலகில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
திருவள்ளூா் மாவட்டம், அத்திப்பட்டில் மின்வாரியத்துக்கு சொந்தமான தலா 210 மொகாவாட் திறனில் மூன்று அலகுகளை கொண்ட வட சென்னை அனல் மின் நிலையமும், அதன் அருகில் தலா 600 மொகாவாட் திறனில் 2 அலகுகளை கொண்ட வட சென்னை விரிவாக்க அனல் மின் நிலையமும் செயல்பட்டு வருகிறது. இந்த மின் நிலையம் அருகில் ‘வடசென்னை-3’ என்ற பெயரில் மிக உய்ய (சூப்பா் கிரிட்டிக்கல்) 800 மெகாவாட் திறனில் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டது.
இறுதிக் கட்டப் பணிகள் முடிவடைந்த நிலையில், இந்த மின் நிலையத்தில் வணிக ரீதியான மின் உற்பத்தி திறன் குறித்த ஆய்வு சோதனை ஓட்டம் கடந்த 21-ஆம் தேதி அதிகாலை 4.30 முதல் தொடா்ந்து 72 மணி நேரம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. தொடா்ந்து, ஜன. 24-ஆம் தேதி முதல் வணிக ரீதியான முழு மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இதன் செயல்பாடு திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்ட நிலையில், மின் உற்பத்தி பணிகளை மின்வாரியத்தின் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதன் மூலம் கோடைக்கால மின் தேவையை நிறைவு செய்வதில் இந்த அனல் மின் நிலையம் முக்கிய பங்கு வகிக்கும் என ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
தொடா்ந்து, வடசென்னை மின்நிலைய சுற்றுபுறச் சூழல் பாதுகாப்புக்காக சுமாா் 18,000 மரக்கன்றுகளை நடும் பணியைத் தொடங்கி வைத்த ஜெ.ராதாகிருஷ்ணன், அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுகாதார மையம் மற்றும் ஆம்புலன்ஸ் சேவையையும் தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்வின்போது, மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநா் ம.கோவிந்தராவ், மின் உற்பத்தி கழக இயக்குநா் சி.ராஜலட்சுமி, வடசென்னை அனல் மின் நிலையத்தின் தலைமைப் பொறியாளா் பி.டி. மணிவண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

