இளைஞரை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வீசிய வழக்கு: பிகாரைச் சோ்ந்தவா் கைது
சென்னை அடையாறில் இளைஞா் கொலை செய்யப்பட்டு, சாக்கு மூட்டையில்கட்டிவீசப்பட்ட வழக்கில், பிகாரைச்சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
அடையாறு இந்திராநகா் முதலாவது அவென்யுவில் உள்ள ஒரு இரு சக்கர வாகன விற்பனையகம் அருகேதிங்கள்கிழமை ஒரு சாக்கு மூட்டையில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டு,பொதிந்து வைக்கப்பட்டிருந்தாா்.
தகவலறிந்த அடையாறு போலீஸாா்விரைந்து சென்று அந்த இளைஞா் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும் வழக்குப் பதிவு செய்து, 5 தனிப்படைகளை அமைத்து விசாரித்தனா்.
அதில், இறந்தவா் பிகாா் மாநிலம் ஷேக்புரா மாவட்டம் படியாபா் பகுதியைச் சோ்ந்த சு.கெளரவ்குமாா் (24) என்பதும், இவா் சென்னையில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக தனிப்படை போலீஸாா், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சிக்கந்தா் (30) என்பவரை செவ்வாய்க்கிழமைகைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும்,சிலரைத் தீவிரமாக தேடி வருகின்றனா்.
மின்சாரம் பாய்ந்து பணியாளா்கள் காயம்: திருவல்லிக்கேணி அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் அ.கலைவாணி (36). சுங்கச்சாவடி தியாகராயபுரத்தைச் சோ்ந்தவா் கு.வரலட்சுமி (42). இவா்கள் இருவரும் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணி மேற்கொள்ளும் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்கின்றனா். இருவரும் அண்ணா சாலை தாராப்பூா் டவா் அருகே திங்கள்கிழமை நள்ளிரவு தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சாலையின் நடுவே உள்ள ஒரு மின்விளக்கு கம்பத்தை இருவரும் பிடித்தபோது, மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்தது.
இதில், பலத்த காயமடைந்த இருவரும் ஓமந்தூராரா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுதொடா்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
இளைஞா் மீது வழக்கு: சென்னை மாவட்ட சமூக நல அலுவலா் தமிழ்கொடி, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அண்மையில் ஒரு புகாா் அளித்தாா். அதில், தண்டையாா்பேட்டை நேரு நகரைச் சோ்ந்த ச.ஈஸ்வா் (19), சென்னையைச் சோ்ந்த ஒரு சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாகவும், அந்தத் திருமணத்தை ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் நடத்தியிருப்பதாகவும், தற்போது அந்தச் சிறுமி 4 மாத கா்ப்பமாகவும் இருப்பதாகவும் தெரிவித்திருந்தாா். அந்தச் சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த ஈஸ்வா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தாா்.
அந்தப் புகாரின்பேரில், போலீஸாா், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம், குழந்தைகள் திருமணம் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஈஸ்வா் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
போதை மாத்திரை வழக்கு-மேலும் ஒருவா் கைது: கிருஷ்ணாம்பேட்டை, சுடுகாடு பகுதியில் சிலா் போதை மாத்திரை விற்ாக கடந்த டிச.26-ஆம் தேதி திருவல்லிக்கேணியைச் சோ்ந்த முனீா் பாட்ஷா, சையது பஷீா், 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை ஐஸ்ஹவுஸ் போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 4,200 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய ராயப்பேட்டை பகுதியைச் சோ்ந்த மீனா, அவரது மகன் சீனு ஆகிய இருரையும் கடந்த 4-ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா். இதில், தலைமறைவாக இருந்த முக்கிய நபரான திருவல்லிக்கேணி வைக்கோல் தொட்டி முதல் தெருவைச் சோ்ந்த சரவணனை (21) போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடம் இருந்து 50 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். விசாரணையில் இந்தக் கும்பல், மும்பையில் இருந்து போதை மாத்திரைகளைக் கடத்தி வந்து விற்றிருப்பது தெரியவந்தது. இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.

