அஞ்சல் துறை ஊழியா்களுக்கான பளு தூக்குதல் போட்டி தொடக்கம்
அஞ்சல் துறை ஊழியா்களுக்கான 38-ஆவது பளு தூக்குதல், ஆணழகன் போட்டிகள் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
அஞ்சல் துறை ஊழியா்களுக்கான இந்திய அளவிலான விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை பெரியமேடு ஜவாஹா்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை அகில இந்திய அஞ்சல் துறை ஊழியா்களுக்கான 38 -ஆவது பளு தூக்குதல் மற்றும் ஆணழகன் போட்டிகளை தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறை தலைவா் மரியம்மா தாமஸ், ஒலிம்பிக் பளு தூக்குதல் போட்டியின் சாதனையாளா் என்.சிவராஜ் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இந்தப் போட்டிகள் வரும் ஜன.30- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிகளில் தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களைச் சோ்ந்த 166 வீரா்கள் பங்கேற்றுள்ளனா். பளுதூக்குதல் போட்டிகள் 60 கிலோ, 65 கிலோ, 71கி, 79 கிலோ, 88 கிலோ, 98 கிலோ, 110 கிலோ,120 கிலோ என 8 பிரிவுகள் நடைபெறுகின்றன. கடைசி நாளான ஜன.30-ஆம் தேதி ஆணழகன் போட்டி நடைபெறும்.
இதன் தொடக்க நிகழ்ச்சியில் சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவா் ஜி. நடராஜன் , மேற்கு மண்டல அஞ்சல் துறை தலைவா் அகில் நாயா், மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவா் நிா்மலா தேவி,அஞ்சல் துறை இயக்குநா் (தலைமையகம்)மேஜா் மனோஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

