11 மாவட்டங்களில் இன்று பனிமூட்டம்
தமிழகத்தில் திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா் உள்பட 11 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை(ஜன.30) லேசான மற்றும் மிதமான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வெள்ளிக்கிழமை(ஜன.30) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டமும், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூா் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
தொடா்ந்து, பிப்.1 முதல் பிப்.4 வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஆனால் தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்(ஜன.30, 31) சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

