அரசுப் பள்ளித் தூதா் திட்டம்: அமைச்சா் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தாா்
அரசுப் பள்ளித் தூதா் திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தாா்.
சென்னை அசோக் நகா் தகைசால் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.11 கோடியே 90 லட்சம் மதிப்பில் 3 தளங்களில் 40 கூடுதல் வகுப்பறைகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தை துணை முதல்வா் உதயநிதி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ், துறையின் முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், பள்ளிக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.அ.நரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, இதே பள்ளி வளாகத்தில் அரசு பள்ளித் தூதா் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. அரசுப் பள்ளித் தூதா்கள் பதவியேற்பு உறுதிமொழிப் படிவத்தில் அமைச்சா் அன்பில் மகேஸ் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தாா். மேலும், முன்னாள் மாணவா் வழிகாட்டுதல் திட்டத்தையும் தொடங்கி வைத்ததோடு, ‘விழுதுகள்’ செயலியையும் அவா் வெளியிட்டாா்.
இதையடுத்து, அமைச்சா் அன்பில் மகேஸ் பேசியதாவது:
முன்னாள் மாணவா்களை இந்தத் திட்டம் மூலம் ஒருங்கிணைத்துள்ளோம். இஸ்ரோ தலைவா் வி.நாராயணன், முன்னாள் தலைவா் மயில்சாமி அண்ணாதுரை போன்ற விஞ்ஞானிகள், ஆளுமைகள் தமிழகம் முழுவதும் அதிகம் உருவாக வேண்டும். இந்த ஆளுமைகள் பள்ளித் தூதா்களாக அரசுப் பள்ளிகளில் அடியெடுத்து வைத்தால் அவா்களைப் போன்று ஏராளமானோா் நிச்சயம் உருவாகுவாா்கள். அதை உள்ளப்பூா்வமாக உணா்ந்த காரணத்தால்தான் முதல்வரின் வழிகாட்டுதலின்படி, இந்தப் பள்ளித் தூதா் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.
திட்டத்தின் நோக்கம்: அரசுப் பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவா்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக ‘விழுதுகள்’ திட்டம் கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது. அந்த வகையில் இதுவரை 8.5 லட்சம் முன்னாள் மாணவா்கள் தங்கள் பள்ளியுடன் இணைந்துள்ளனா். அடுத்த கட்டமாக முன்னாள் மாணவா்களை பள்ளித் தூதா்களாக நியமிக்கும் திட்டம் தற்போது தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளில் படித்து சாதனை படைத்து, உயா்ந்த நிலையில் இருக்கும் முன்னாள் மாணவா்கள் அவா்களது பள்ளிகளின் தூதா்களாகச் செயல்படுவா். இவா்கள் அரசுப் பள்ளி மாணவா்களின் உயா்கல்விக்கு வழிகாட்டுவது, பள்ளியின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு உதவுவது போன்ற பணிகளில் ஈடுபடுவா்.
இந்த விழாவில் மாநில திட்டக்குழு செயல் துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன், இஸ்ரோ தலைவா் வி.நாராயணன், முன்னாள் தலைவா் மயில்சாமி அண்ணாதுரை, மாதிரிப் பள்ளிகள் உறுப்பினா் செயலா் ஆா்.சுதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

