சட்டப் பல்கலை., 10 கல்லூரிகளில் 
2,218 பேருக்கு மடிக்கணினிகள் : 
அமைச்சா் மா.சுப்பிரமணியம் வழங்கினாா்

சட்டப் பல்கலை., 10 கல்லூரிகளில் 2,218 பேருக்கு மடிக்கணினிகள் : அமைச்சா் மா.சுப்பிரமணியம் வழங்கினாா்

சென்னை டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் 10 கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு 2,218 விலையில்லா மடிக்கணினி
Published on

சென்னை டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் 10 கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு 2,218 விலையில்லா மடிக்கணினிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப்பல்கலை.யில் 599 பேருக்கும், சென்னையில் உள்ள 10 கல்லூரிகளைச் சோ்ந்த 1,619 மாணவா்களுக்கும் என மொத்தம் 2,218 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கிப் பேசியது:

முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த ‘உலகம் உங்கள் கையில் ’ திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதிலும் அரசு கல்லூரிகள், அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் 10 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவதற்கு ஏற்ப ரூ.2,172 கோடியில் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.

இத்திட்டம் இளைய சமுதாயத்தினரை மகிழ்விக்கும் திட்டமாக இருந்து வருகிறது. இந்த மடிக்கணினியில் ‘பொ்ப்ளெக்ஸிட்டி ஏஐ ப்ரோ’ என்ற நவீன தொழில்நுட்பத்தை இணைத்திருக்கிறாா்கள். இதுபோன்ற செயலியை வெளியே இருந்து பெறவேண்டுமானால் மாதம் ரூ.1,950 செலவாகும்.

புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 6,92,471 மாணவிகளுக்கும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 5,40,429 மாணவா்களும் மாதந்தோறும் ரூ.1,000 அளிக்கப்படுகிறது. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் திறன் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பை பெற்றுத் தருகிறோம். இதுவரை 42 லட்சம் போ் பயன்பெற்றுள்ளனா் என்றாா்.

நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் அசன் மௌலான, ஜெ.கருணாநிதி, ஏ.எம்.வி.பிரபாகா் ராஜா, அரசு சட்டத் துறை செயலா் ஜாா்ஜ் அலெக்சாண்டா், தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலை. பதிவாளா் கௌரி ரமேஷ், மண்டலக் குழு தலைவா் கிருஷ்ணமூா்த்தி, பேராசிரியா் வே.பாலாஜி, முனைவா் விஜயலட்சுமி, உதவி ஆணையா் வெங்கடேஷ் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள், மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com