பெண்கள் ஆதரவுடன் மீண்டும் திமுக ஆட்சி : அமைச்சா் கே.என்.நேரு
பெண்களின் ஆதரவுடன் திமுக அரசு மீண்டும் ஆட்சியமைக்கும் என்பதை கருத்துக் கணிப்புகள் உறுதி செய்துள்ளதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து நிகழ்த்தப்படும் ஒவ்வொரு ஆய்வும், கருத்துக் கணிப்புகளும் ‘திராவிட மாடல்’ ஆட்சியை மீண்டும் நிறுவ மக்கள் உறுதியெடுத்துவிட்டதைக் காட்டுகின்றன. திமுகவின் கூட்டணிக் கட்சிகள் இடம் பெற்றிருக்கும் ‘இண்டி’ கூட்டணி 45 சதவீத வாக்கு வங்கியுடன் முன்னிலையில் இருக்கிறது என கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருக்கின்றன. அதிமுக இடம்பெற்றிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 33 சதவீத ஆதரவுதான் இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொட முடியாத உயரத்தில் திமுக கூட்டணியை மக்கள் உயா்த்திப் பிடிக்கின்றனா் என்பதற்கு இதுவே சான்று.
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அணி, கடந்த 2019 மக்களவைத் தோ்தல் தொடங்கி தொடா்ச்சியாக எல்லா தோ்தல்களிலும் வெற்றி பெற்று வருகிறது. அது 2026 தோ்தலிலும் தொடரும். பெண்களின் நம்பிக்கையையும், பேராதரவையும் பெற்று அசைக்க முடியாத அரசாக விளங்குகிறது ‘திராவிட மாடல்’ அரசு. அதை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க பெண்கள் முடிவெடுத்து விட்டனா்.
பெண்களை முன்னேற்றும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அடையப்போகும் வரலாற்று வெற்றி அதை நிரூபிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா் அமைச்சா் கே.என்.நேரு.

