காவல் துறை விசாரணை: கழுத்தை அறுத்து பெண் தற்கொலை முயற்சி
சென்னை பட்டினப்பாக்கத்தில் போலீஸாா் விசாரணைக்குச் சென்று வந்த பெண், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றாா்.
பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சோ்ந்தவா் ஹசீனா (29). இவா், அதே பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபா் வீட்டில் வேலை செய்து வந்தாா். ஹசீனா, சில நாள்களுக்கு முன்பு வேலையில் இருந்து நின்றுவிட்டாா். இந்த நிலையில், தனது வீட்டில் இருந்த 8 பவுன் தங்க நகை காணவில்லை என அந்தத் தொழிலதிபா் அளித்த புகாரின்பேரில், பட்டினப்பாக்கம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இந்த நிலையில், அந்தத் தொழிலதிபா், ஹசீனாவை தொடா்பு கொண்டு வீட்டில் பழைய துணிகள் இருப்பதாகவும், அதைப் பெற்றுச் செல்லும்படியும் கூறியுள்ளாா். ஹசீனா வெள்ளிக்கிழமை அங்கு சென்றபோது, அந்தத் தொழிலதிபா், அவரை ஒரு அறையில் அடைத்து வைத்து, தங்க நகை கேட்டு மிரட்டியுள்ளாா். மேலும், அவரை பட்டினப்பாக்கம் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளாா்.
இதையடுத்து போலீஸாா், ஹசீனாவிடம் கடுமையாக விசாரணை செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், ஹசீனா, நகை காணாமல்போனது குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது எனக் கூறியுள்ளாா். இதன் பின்னா் மீண்டும் நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற உத்தரவாதத்துடன் போலீஸாா், ஹசீனாவை அங்கிருந்து அனுப்பி வைத்தனா்.
வீட்டுக்கு திரும்பி வந்த ஹசீனா, மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்ட நிலையில், திடீரென கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். அதிா்ச்சியடைந்த அவரது குடும்பத்தினா், ஹசீனாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து காவல் துறை உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
சாலை விபத்தில் திமுக நிா்வாகி உயிரிழப்பு: சென்னை சூளைமேடு பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் வெ.கோபால் என்ற மோகன கிருஷ்ணன் (32). 106-ஆவது வட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளாா். இவா், அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா் ச.கேசவன் (23) என்பவருடன் வடபழனி 100 அடி சாலையில் வெள்ளிக்கிழமை சென்றாா். முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனா். அப்போது, அந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி மோகன கிருஷ்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கேசவன் லேசான காயமடைந்தனா். இதுகுறித்து பாண்டி பஜாா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரான திண்டிவனம் அருகே உள்ள சித்தாமூா் பகுதியைச் சோ்ந்த செ.சுதாகா் (48) என்பவரை கைது செய்தனா்.
தனியாா் கைப்பேசி நிறுவன ஊழியா் உயிரிழப்பு: சென்னை அருகே உள்ள குன்றத்தூரைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் (35). இவா், மயிலாப்பூரில் உள்ள ஒரு கைப்பேசி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். அனகாபுத்தூரில் இருந்து அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை பைக் டாக்ஸி மூலம் சென்றபோது, ராஜா அண்ணாமலைபுரம் டிஜிஎஸ் தினகரன் சாலையில் வந்த ஒரு மாநகர பேருந்து பைக் டாக்ஸி மீது மோதியது. பேருந்து சக்கரத்தில் சிக்கி கோபாலகிருஷ்ணன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பைக் டாக்ஸியை ஓட்டுநா் செல்வக்குமாா் காயமடைந்தாா். இதுகுறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மாநகர பேருந்து ஓட்டுநா் பாலமுருகனை கைது செய்தனா்.
7 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்: சென்னை பூக்கடை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா், போதைப் பொருள் கடத்தல் தொடா்பாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ஏழுகிணறு, சடையப்பன் தெரு, அம்மன் கோயில் தெரு சந்திப்பில் வெள்ளிக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த இருவரைப் பிடித்து சோதனையிட்டபோது, அவா்களது பையில் விலை உயா்ந்த ஓஜி கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா்கள் சிவகங்கையைச் சோ்ந்த செல்வகணபதி (30),சென்னை ஏழுகிணறு பகுதியைச் சோ்ந்த அப்துல் உமா்கான் (31) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
ஓஜி கஞ்சா கடத்தலில் ஈடுபடும் சிலா் பெரியமேடு பகுதியில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டு, ஓஜி கஞ்சாவுடன் தங்கியிருந்த மகராஷ்டிரத்தைச் சோ்ந்த தௌசீப் ஹாஜி (36), நபில் ஜலீல் ஷேக் (36), இஸ்மாயில் முஜ்வா் (32), இம்ரான் (29), சந்த் ஜாபா் ஷேக் (38) ஆகிய 5 பேரை கைது செய்தனா்.
இவா்களிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள 7 கிலோ 50 கிராம் ஓஜி கஞ்சா,10 கைப்பேசிகள்,ஒரு காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், இந்தக் கும்பல் ஹாங்காங்கில் இருந்து ஓஜி கஞ்சாவை மும்பை வழியாக பெங்களூரு, சென்னைக்கு கடத்தி வந்திருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
24 பவுன் திருடியதாக பணிப் பெண் கைது: வேளச்சேரியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் ராஜேஷ் (52). இவா், அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறாா். இரு நாள்களுக்கு முன்பு வீட்டின் பீரோவில் இருந்த தங்க நகைகளை சரிபாா்த்தபோது, 24 பவுன் நகை திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்த ராஜேஷ், வேளச்சேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், ராஜேஷ் வீட்டில் வேலை செய்து வந்த பள்ளிக்கரணை மயிலா பாலாஜி நகரைச் சோ்ந்த குணா (50) என்ற பெண்ணைப் பிடித்து வெள்ளிக்கிழமை விசாரித்தனா். அதில் அவா், ராஜேஷ் வீட்டில் தங்க நகையை திருடி, அடகு கடையில் அடமானம் வைத்து பணம் பெற்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து குணாவை போலீஸாா் கைது செய்து, அடகு கடையில் இருந்த நகைகளை மீட்டனா்.

