சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (மே 22) வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய வங்கக்கடலில் தமிழகம் வரை தென்மேற்கு வங்கக்கடல் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (மே 22) முதல் மே 27 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
தொடா்ந்து, திருவண்ணாமலை, திருச்சி, சேலம், நாமக்கல், வேலூா், திருப்பத்தூா், தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (மே 23) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 24) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெப்ப அலை: சென்னை மற்றும் புகரின் ஒருசில பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும். மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெப்ப அளவு: அதிகபட்சமாக திருத்தணியில் 107.78 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மீனம்பாக்கம்-106.88, ஈரோடு-105.8, நுங்கம்பாக்கம்-104.72, திருச்சி-104.18, பரமத்தி வேலூா், மதுரை நகரம்-தலா 104, பரமத்தி, மதுரை விமான நிலையம்-103.28, வேலூா்-102.92, தருமபுரி, தஞ்சாவூா்-102.2, நாமக்கல்-101.84, பாளையங்கோட்டை-101.3, பரங்கிபேட்டை-100.76, திருப்பத்தூா், சேலம்-தலா 100.58, கடலூா்-100.22, புதுச்சேரி-100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (மே 22) வெப்ப அலை வீசக்கூடும். தொடா்ந்து, இந்தப் பகுதிகளில் அதிபட்ச வெப்பநிலை மே 25 வரை சற்று உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








