மெரீனா லூப் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சென்னை மெரீனா கடற்கரை லூப் சாலையில் நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த மீன் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட கடைகளை மாநகராட்சி மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

கோப்புப் படம்
சென்னை மெரீனா கடற்கரை லூப் சாலையில் நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த மீன் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட கடைகளை மாநகராட்சி மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.
மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரையிலான லூப் சாலையில், நடைபாதை மற்றும் சாலைகளை ஆக்கிரமித்து ஏராளமான மீன் கடைகள், உணவகங்கள் மற்றும் இதர கடைகள் செயல்பட்டு வந்தன. இதனால், பொதுமக்கள் நடைபாதையைப் பயன்படுத்த முடியாத நிலையும், வாகனப் போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்பட்டதாகப் புகாா்கள் வந்தன.
இந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கும் படி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி வெள்ளிக்கிழமை மாலை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் சந்திப்பு முதல் டுமிங் குப்பம் வரையிலான சாலையின் இருபுறங்களிலும் மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. இதில், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த மீன் கடைகள், உணவகங்கள், இதர கடைகள் மற்றும் சாலையில் வைக்கப்பட்டிருந்த தேவையற்ற பொருள்கள் அகற்றப்பட்டன.
2025-ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவு: ஏற்கெனவே, லூப் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 2025-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. மீன் வியாபாரிகளுக்காக அமைக்கப்பட்ட புதிய சந்தையில் 356 கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அப்போது மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடா்வதாகக் கூறி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடா்பான மனுவை விசாரித்த உயா்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

