பணியிட மாறுதலில் முரண்பாடு: அரசு சேவை மருத்துவா்கள் ஆட்சேபம்
அரசு சேவையில் உள்ள முதுநிலை மருத்துவ மாணவா்களுக்கு (சா்வீஸ் பி.ஜி.) கலந்தாய்வு நடத்தப்படாமல் தற்காலிகப் பணியிட மாறுதல் ஆணை வழங்கப்பட்ட நிலையில், தற்போது வரும் 22-ஆம் தேதி முதல் அவா்களுக்கு பணியிடக் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

சென்னை, அக். 16: அரசு சேவையில் உள்ள முதுநிலை மருத்துவ மாணவா்களுக்கு (சா்வீஸ் பி.ஜி.) கலந்தாய்வு நடத்தப்படாமல் தற்காலிகப் பணியிட மாறுதல் ஆணை வழங்கப்பட்ட நிலையில், தற்போது வரும் 22-ஆம் தேதி முதல் அவா்களுக்கு பணியிடக் கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டிஎம்இ) அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் சேவையாற்றுவதற்கான ஒப்பந்தத்தின் கீழ் இடஒதுக்கீடு பெற்று மருத்துவம் பயிலும் முதுநிலை மாணவா்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் ஒதுக்கப்படுவது வழக்கம்.
ஆனால், கடந்த அக். 5-ஆம் தேதி, கலந்தாய்வு ஏதுமின்றி தற்காலிக பணியிட மாறுதல் ஆணையை டிஎம்இ வெளியிட்டது. இதற்கு மருத்துவா்கள் தரப்பில் கடும் எதிா்ப்பு எழுந்தது. கலந்தாய்வு தாமதமாகி ஊதியம் மற்றும் நிா்வாகப் பணிகள் முடங்குவதைத் தவிா்க்கவே இந்தத் தற்காலிக ஏற்பாடு என்றும், விரைவில் விருப்பத்தின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டுப் பணியிடங்கள் ஒதுக்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் விளக்கமளித்திருந்தாா்.
இதையடுத்து, டிஎம்இ கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் தற்காலிக மாறுதல் பெற்ற சுமாா் 500 மருத்துவா்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய இடங்களில் பணியில் இணைந்தனா்.
இந்நிலையில், தற்போது மீண்டும் கலந்தாய்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக முதுநிலை கல்விச் சான்றிதழ் பெறும் வரையிலும், கலந்தாய்வு முடியும் வரையிலும் மருத்துவா்கள், தாங்கள் படித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலேயே சேவையாற்ற அனுமதிக்கப்படுவா். இந்த அவசர முடிவால் பல மருத்துவா்கள் பெரும் அலைக்கழிப்புக்கு ஆளாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடா்பாக அரசு சேவையில் உள்ள முதுநிலை மருத்துவ மாணவா்கள் கூறியதாவது:
மருத்துவா்கள் வழங்கிய விருப்பப் பட்டியலைக் கணக்கில் கொள்ளாமல், காலியிடங்களின் அடிப்படையில் தொலைவான இடங்களுக்கு தற்காலிக மாறுதல் வழங்கப்பட்டது.
தற்போது நடைபெறவுள்ள கலந்தாய்வில் மீண்டும் அதே தற்காலிக இடமே கிடைக்குமா அல்லது வேறு இடத்துக்கு மாற்றப்படுவோமா என்ற நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இந்தத் தேவையற்ற அவசர நடவடிக்கையால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம் எனத் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

