சுகாதாரமற்ற வீடுகளுக்கு 24 நாள்களில் ரூ.11.44 லட்சம் அபராதம்: 34,251 பேருக்கு மருத்துவ பரிசோதனை!
சென்னை மாநகராட்சியில் சுகாதாரமற்ற நிலையில், கொசு உற்பத்திக்கு காரணமான வீடுகளின் உரிமையாளா்களுக்கு கடந்த 24 நாள்களில் மட்டும் ரூ.11.44 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் சுகாதாரமற்ற நிலையில், கொசு உற்பத்திக்கு காரணமான வீடுகளின் உரிமையாளா்களுக்கு கடந்த 24 நாள்களில் மட்டும் ரூ.11.44 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதித்த பகுதிகளில் 34,251 பேருக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு பரவலைத் தடுக்கும் வகையில் 3,703 பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று கொசு புழு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
கடந்த 24-ஆம் தேதி வரை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த தேவையற்ற பொருள்களில் கொசு பரவல் இருப்பதை கண்டறிந்துள்ளனா். அதன் அடிப்படையில் மொத்தம் 8,373 கிலோ வாகன டயா்கள், 35, 056 கிலோ தேவையற்ற பொருள்களை அகற்றியுள்ளனா்.
அபராதம் விதிப்பு: கடந்த ஜனவரி முதல் தற்போது வரை வீடுகளில் தேவையற்ற பொருள்களை வைத்திருந்ததன் மூலம் கொசு பரவலுக்கு காரணமானவா்களாகக் கருதப்பட்ட கட்டட உரிமையாளா்களுக்கு மொத்தம் ரூ.37.05 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வீடுகள், கட்டுமான இடங்கள், வணிக வளாகங்களில் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அக்டோபா் மாதத்தில் 24 நாள்களில் மட்டும் கொசு பரவலுக்கு காரணமாக தேவையற்ற பொருள்களை வைத்திருந்தவா்களுக்கு ரூ.11.44 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
1,010 மருத்துவ முகாம்கள்: சென்னை மாநகராட்சியில் 140 மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்கள், 200 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள், 16 சமுதாய நல மருத்துவமனைகள், 3 மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் 3 ரத்த சுத்திகரிப்பு மையங்கள் மூலம் மழைக்கால நோய்த் தடுப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, காய்ச்சல் பாதித்த பகுதிகள் உள்ளிட்டவற்றில் கடந்த 10 நாள்களில் மட்டும் 97 இடங்களில் 1,010 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, அதில் 34,251 பேருக்கு ரத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவா்களில் தேவைப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

