ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
By DIN | Published On : 04th April 2019 04:20 AM | Last Updated : 04th April 2019 04:20 AM | அ+அ அ- |

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதால் ஆட்சியர் தலைமையில் நடைபெறும் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார்ப் பெட்டியில் போட்டு விட்டுச் செல்கின்றனர்.
இந்நிலையில், புதன்கிழமை மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த திவ்யா (25) என்ற பெண், திடீரென அவர் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை தலைமீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதைப் பார்த்த போலீஸார் திவ்யாவின் மீது தண்ணீரை ஊற்றித் தற்கொலை முயற்சியைத் தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், சிதம்பரத்தைச் சேர்ந்த அவர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராஜதீபன்(29) என்பவரை காதலித்துள்ளார். கடந்த 2018 செப்டம்பரில் காஞ்சிபுரம் கோயில் ஒன்றில் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து, வாடகைக்கு வீடு எடுத்து 3 மாதங்கள் வரை சேர்ந்து வசித்துள்ளனர். பின்னர், ராஜதீபன் திவ்யாவை ஏமாற்றி விட்டுச் தப்பிச் சென்றதாகவும் தெரியவந்தது. இதுகுறித்து மனு அளிக்க வந்த திவ்யா தீக்குளிக்க முயன்றுள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.