போக்குவரத்து போலீஸார் பற்றாக்குறையால் நெரிசலில் தவிக்கும் வாகன ஓட்டுநர்கள்

போக்குவரத்து போலீஸார் பற்றாக்குறை காரணமாக ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், இருங்காட்டுக்கோட்டை, படப்பை ஆகிய பகுதிகளில் தினந்தோறும் ஏற்படும்
போக்குவரத்து போலீஸார் பற்றாக்குறையால் நெரிசலில் தவிக்கும் வாகன ஓட்டுநர்கள்

போக்குவரத்து போலீஸார் பற்றாக்குறை காரணமாக ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், இருங்காட்டுக்கோட்டை, படப்பை ஆகிய பகுதிகளில் தினந்தோறும் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டுநர்களும், பொதுமக்களும் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
 ஸ்ரீபெரும்புதூர் காவல் உட்கோட்டத்திற்குள்பட்ட இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்பட்டு ஹுண்டாய், ரெனால்ட்-நிஸான், யமஹா, என்பீல்டு, டைம்லர் கார் உற்பத்தித் தொழிற்சாலைகளும், கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனத் தொழிற்சாலைகளும், அவற்றின் உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.
 அதேபோல மாம்பாக்கம், சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் வீட்டு உபயோகப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும், மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.
 சிப்காட் தொழிற்பூங்காக்களில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்களை கொண்டு வரவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு செல்லவும் தினந்தோறும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் இருங்காட்டுக்கோட்டை பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. மேலும், இத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை அழைத்துவர காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
 இதன் காரணமாக, தொழிற்சாலைகளில் ஷிப்டு முடியும் நேரங்களான காலை, மதியம், மாலை நேரங்களில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலும், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் கூட்டுச் சாலையிலும், ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் போன்ற பகுதியிலும் தினந்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
 போக்குவரத்து போலீஸார் பற்றாக்குறை: ஸ்ரீபெரும்புதூர் காவல் உட்கோட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், சுங்குவார்சத்திரம், மணிமங்கலம், சோமங்கலம் ஆகிய ஐந்து காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் ஸ்ரீபெரும்புதூரில் ஒரே ஒரு போக்குவரத்து காவல் நிலையம் மட்டுமே இயங்கிவருகிறது.
 போக்குவரத்து காவலர் பற்றாக்குறை குறித்து ஸ்ரீபெரும்புதூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது: ஸ்ரீபெரும்புதூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் ஆய்வாளர், மூன்று உதவி ஆய்வாளர்கள், மூன்று தலைமைக் காவலர்கள், மூன்று முதல்நிலை காவலர்கள், 7 காவலர்கள் என மொத்தம் 17 காவலர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால், போக்குவரத்து நெரிசல் மிகுதியாக உள்ளதால் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள 3 காவலர்கள் உள்பட மொத்தம் 20 பேர் பணியாற்றி வருகிறோம். இதுதவிர, ஆயுதப்படையைச் சேர்ந்த 5 பெண் காவலர்களும் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
 ஸ்ரீபெரும்புதூர் காவல் உட்கோட்டத்தில் 5 காவல் நிலையங்கள் உள்ளன. ஆனால் போக்குவரத்து காவல் நிலையம் ஸ்ரீபெரும்புதூரில் மட்டுமே அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த போக்குவரத்து காவல் நிலையத்திற்கு தற்போதைய சூழ்நிலையில் 40 போலீஸார் இருந்தால்தான் போதுமானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
 இங்குள்ள போக்குவரத்து காவலர்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய எல்லையில் மட்டுமே பணிபுரிய வேண்டும். அருகாமையில் உள்ள சுங்குவார் சத்திரம், இருங்காட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில் அங்கு சட்டம்-ஒழுங்கு போலீஸார்தான் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துகின்றனர்.
 எனவே, புறநகரில் ஏற்படும் போக்குவரத்துப் பிரச்னையைச் சமாளிக்க புறநகர் போக்குவரத்து காவல் நிலையத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும், ஸ்ரீபெரும்புதூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
 இயங்காத தானியங்கி சிக்னல்கள்: சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் காவல் உட்கோட்டத்தைச் சேர்ந்த செட்டிப்பேடு, தண்டலம், இருங்காட்டுக்கோட்டை, நோக்கியா தொழிற்சாலை, நீதிமன்றம் ஆகிய இடங்களில் தனியார் நிறுவனங்கள் சார்பாக தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. போதுமான பராமரிப்பு இல்லாததால் பெரும்பாலான சிக்னல்கள் இயங்குவதில்லை. இதன்காரணமாகவும், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, பழுதடைந்துள்ள தானியங்கி சிக்னல்களை சீரமைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.
 மேம்பாலங்கள் அவசியம்: சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையுடன், மாநில நெடுஞ்சாலைகள் இணையும் இடங்களான ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடம் ஆகிய பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டால் மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும். எனவே மேம்பாலங்கள் அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டுநர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com